பள்ளியில் இறங்கிய அரக்கன்.. மாணவர்களை நோக்கி மோசமான துப்பாக்கி சூடு.. தாய்லாந்தில் திக்திக்
பாங்காக்: தாய்லாந்தில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குப் பள்ளியில் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்தோரை நோக்கி தாறுமாறாகத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். மேலும், பலரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளான். இது குறித்த தகவல் கிடைத்தவுடன் விரைந்த சென்ற போலீசார், அங்கு என்ன நடந்தது என்பது குறித்த விசாரணையில் இறங்கினர். இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நமது நாட்டில் துப்பாக்கிக்கு எப்போதும் கடுமையான விதிகள் இருக்கிறது. அவ்வளவு சீக்கிரம் ஒருவருக்குத் துப்பாக்கி கிடைத்துவிடாது. இதற்கு உரிமம் கோரி விண்ணப்பிக்கும்போது ஏகப்பட்ட கேள்விகள் கேட்கப்படும். உண்மையாகவே ஒருவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று கருதினால் மட்டுமே துப்பாக்கி வைத்திருக்க உரிமம் வழங்கப்படும்.

துப்பாக்கி சட்டம்
அப்போதும் கூட ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கும். ஒவ்வொரு குண்டுக்கும் கூட கணக்குக் காட்ட வேண்டும். மேலும், தேர்தல் போன்ற நிகழ்வுகள் வரும்போது முன்கூட்டியே அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் துப்பாக்கியை ஒப்படைக்க வேண்டும். இதுபோல ஏகப்பட்ட ரூல்ஸ் இருக்கும். நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் உருவாகாமல் இருக்கவே இந்தக் கட்டுப்பாடுகளைப் போடுகிறார்கள்.
அதேநேரம் உலகின் மற்ற நாடுகளிலும் இதே அளவுக்குக் கட்டுப்பாடுகள் இருக்கும் எனச் சொல்ல முடியாது. பல நாடுகளில் துப்பாக்கிக்குக் கடுமையான சட்டம் இருப்பதில்லை. அப்படித் தான் தாய்லாந்திலும் துப்பாக்கி சட்டம் கடுமையானதாக இல்லை என்று நீண்ட காலமாகவே புகார்கள் உள்ளன. இதனால் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இப்போதும் அப்படியொரு சம்பவம் தான் நடந்துள்ளது.
தாய்லாந்து மர்ம ஆசாமி
தாய்லாந்தின் சொன்க்லா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் பணயக் கைதிகளைப் பிடித்து வைத்துள்ளார். இந்தச் சம்பவத்தில் குறைந்தது மூன்று பேர் காயமடைந்தனர். துப்பாக்கியுடன் அந்த நபர் வந்த தகவல் கிடைத்தவுடன் துரிதமாகச் செயல்பட்ட போலீசார், பள்ளிக்கு வந்து என்ன நடந்தது என்பதை விசாரித்தனர்.
இந்தச் சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து துரிதமாகச் செயல்பட்ட போலீசார் அந்த நபரைக் கைது செய்தனர். அனைத்துப் பிணைக்கைதிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். விசாரணையில் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த அந்த நபர் 18 வயது மட்டுமே ஆன இளைஞர் என்பது தெரிய வந்துள்ளது. அவன் பள்ளியில் பல முறை துப்பாக்கியால் சுட்ட போதிலும், நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அந்த நபரைக் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
32 பேர் பலி?
அந்த நபர் பல முறை துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், இதில் பலர் கொல்லப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது. 32 பேர் வரை இந்தச் சம்பவத்தில் உயிரிழந்ததாகத் தகவல்கள் பரவின. இருப்பினும், போலீசார் நடத்திய விசாரணையில் ஒருவரும் உயிரிழக்கவில்லை என்பது உறுதியானது. பள்ளி முதல்வர், காவலர் உட்பட 3 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் அருகே உள்ள சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதல்முறை இல்லை
தாய்லாந்தில் துப்பாக்கி வன்முறை தொடர்பான நிகழ்வுகளும், துப்பாக்கி உரிமை குறித்த விவாதங்களும் புதிய விஷயமல்ல. உதாரணத்திற்கு, 2022ஆம் ஆண்டில் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி திடீரென மழலையர் பள்ளியில் நுழைந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார். அதில் 22 குழந்தைகள் உட்பட 36 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
