இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக பாலஸ்தீனத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பிரம்மாண்ட பேரணி!!
ஜெருசலேம்: காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையைக் கண்டித்து பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரணி நேற்று இரவு நடத்தப்பட்டது. போராட்டத்தின் முடிவில் இஸ்ரேலிய போலீசாருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
காஸாவை ஆக்கிரமித்து தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இத்தாக்குதல்களில் 800 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 100க்கும் மேற்பட்டோர் பிஞ்சு குழந்தைகள்.

மேலும் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் இடம்பெயர்ந்து அகதிகளாகி உள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேலின் கொடூர தாக்குதலைக் கண்டித்து பாலஸ்தீனத்தின் தலைநகரான ரமல்லாவில் இருந்து ஜெருசலேம் நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும் என்று சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த அழைப்பை ஏற்று பல்லாயிரக்கணக்கானோர் ஜெருசலேம் நோக்கி நேற்று இரவு பேரணியாக சென்றனர். கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக இப்படியான பிரம்மாண்ட பேரணி நேற்றுதான் பாலஸ்தீனத்தில் நடைபெற்றுள்ளது.
ஜெருசலேத்தில் உள்ள புனித தலங்களில் ஒன்றான அல் அக்சா மசூதி நோக்கி இப்பேரணி சென்றடைந்தது. அப்போது குலாண்டியா என்ற சோதனைச் சாவடியை பேரணியாக சென்ற பாலஸ்தீனர்கள் கடக்க முயன்றனர். இன்னும் சிலர் மசூதியை ஒட்டி இஸ்ரேல் கட்டி வைத்திருக்கும் பிரம்மாண்ட பல அடி உயர தடுப்பு சுவரை உடைக்க முயற்சித்தனர்.
ஆனால் இஸ்ரேல் போலீசார் அல் அக்சா மசூதிக்குள் பாலஸ்தீனர்கள் நுழைவதைத் தடுத்து தாக்குதலை நடத்தியது. இதில் அப்பாவி பாலஸ்தீனர்கள் இருவர் பலியாகினர். இந்த பேரணியால் பாலஸ்தீனம் -இஸ்ரேல் இடையேயான பதற்றம் உச்சகட்டத்தை அடைந்தது.