பெஞ்சமின் நெதன்யாகு வீட்டை குறிவைத்து மீண்டும் தாக்குதல்? கடும் கோபத்தில் இஸ்ரேல்..உச்ச கட்ட பதற்றம்
ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் மீது கடந்த அக்டோபர் மாதம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு ஹிஸ்புல்லா அமைப்பு பொறுப்பேற்று இருந்த நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு வீட்டின் முன்னே உள்ள கார்டன் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இது தீப்பிழம்புகளை உருவாக்கும் வெடிகுண்டு தாக்குதல் என சொல்லப்படுகிறது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே ஓராண்டிற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்து கட்டும் வரை ஓய மாட்டோம் எனக்கூறியுள்ள இஸ்ரேல், காசா மீது தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இந்த போரில் ஹமாஸ் இயக்கத்தினருக்கு ஆதரவாக லெபானில் உள்ள ஹிஸ்புல்லா அமைபினரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால், ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இது ஈரானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருப்பதால் ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு ஈரானில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு உரிய விகிதத்தில் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் கூறியுள்ளது. இதனால், மத்திய கிழக்கில் போர் மேகம் சூழந்துள்ளது.
இத்தகைய பரபரப்புக்கு இடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இல்லத்தில் மீண்டும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. மத்திய இஸ்ரேலில் உள்ள சிசேரியா நகரத்தில் உள்ள பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே உள்ள முற்றத்தில் ஃப்ளேர்ஸ் எனப்படும் தீப்பிழம்புகள் கிளம்பும் Flash Bomb விழுந்து தீ பற்றி எரிகின்றன. இது தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்வின் போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவோ அவரது குடும்பத்தினரோ..வீட்டில் இல்லை என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறியுள்ளது. இது மிகவும் தீவிரமான விஷயம் எனவும் ஆபத்தை அதிகரிக்கும் செயல் எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறியுள்ளது. இது தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருவதாக கூறியுள்ளது.

பெஞ்சமின் நெதன்யாகு இல்லத்தின் முன்பாக நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு, இஸ்ரேல் அதிபர் இஸாக் ஹெர்ஸோக் கண்டனம் தெரிவித்துள்ளர். பொதுவெளியில் வன்முறை அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கண்டித்துள்ளார். இஸ்ரேலின் பாதுகாப்பு முகமை அதிகாரிகளிடம் இந்த சம்பவம் குறித்து பேசியிருப்பதாகவும், உடனடியாக விசாரணை நடத்தி இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டறிய வேண்டும் எனக் கூறியிருப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார். எனினும், இந்த தாக்குதலுக்கு பின்னணியில் யார் உள்ளனர் என்ற விவரம் தற்போது வரை வெளியாகவில்லை.
முன்னதாக கடந்த அக்டோபர் மாதம், பெஞ்சமின் நெதன்யாகுவின் இதே வீட்டில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவரது பங்களாவின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.












Click it and Unblock the Notifications