20 ஆண்டுக்கு முன் பாடிய "கோடம்பாக்கம் ஏரியா" பாடலை மலேசியாவில் பாடிய ஷோபா! தாயின் குரலை ரசித்த விஜய்
கோலாலம்பூர்: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் "கோடம்பாக்கம் ஏரியா ஒத்துக்கிட்டு வாரியா" என்ற பாடலை ஷோபா சந்திரசேகரன் பாட பாட நடிகர் விஜய் சிரித்துக் கொண்டே ரசித்தார்.
ஜன நாயகன் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில் ஒரு ரோலில் புஸ்ஸி ஆனந்தும் நடிக்கிறார் என்கிறார்கள்.

அது போல் அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார் ஆகிய மூவரும் ஒரு கேமியோ ரோல் செய்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. விஜய்யின் கடைசி படம் இது என்பதால் இந்த படத்திற்கு அதிக வரவேற்பும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இசை வெளியீட்டு விழா
இந்த நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக கோலாலம்பூரில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி நடக்கும் புக்கட் கலீல் மைதானத்தை சுற்றி 5 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் மைதானம்
விஜய் மைதானத்திற்குள் வந்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அப்போது ஈரோட்டில் எடுத்தது போல் மலேசியாவிலும் ரசிகர்களுடன் விஜய் ஒரு செல்பி எடுத்துக் கொண்டார். பின்னர் தளபதி திருவிழா எனும் இசை நிகழ்ச்சியில் பாடகர்கள் பாடல்களை பாடி மகிழ்வித்தனர்.
சிவகாசி படம்
இதற்கு ரசிகர்கள் மகிழ்ச்சியாக நடனம் ஆடியிருந்தனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் விஜய்க்காக அவருடைய அம்மா ஷோபா சந்திரசேகர் ஒரு பாட்டு பாடினார். அதாவது 2005 ஆம் ஆண்டு வெளியான "சிவகாசி" படத்தில் இருந்து தானே பாடிய "கோடம்பாக்கம் ஏரியா ஒத்துகிட்டு வாரியா" எனும் பாடலை பாடினார்.
கைதட்டி ஆரவாரம்
20 ஆண்டுகள் கழித்து அந்த பாடலை ஷோபா பாட பாட விஜய் சிரித்துக் கொண்டே ரசித்தார். ரசிகர்களும் கைதட்டி ஆர்ப்பரித்தனர். ஷோபாவும் நல்ல பாடகி, அவரது சகோதரரும், விஜய்யின் மாமாவான எஸ்.என்.சுரேந்தரும் பாடகர் ஆவார். அந்த ஜீன்களில் இருந்துதான் விஜய்க்கும் பாடும் திறமை அநாயசமாக வந்துவிட்டது.
ஷோபா சந்திரசேகர்
ஷோபா சந்திரசேகரும் விஜய்யும் இணைந்து 1995 ஆம் ஆண்டு வெளியான "விஷ்ணு" என்ற திரைப்படத்தில் "தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா" என்ற பாடலை பின்னணியில் பாடியிருந்தனர். தாயும் மகனும் சேர்ந்து இப்படி ஒரு பாடலை இதுவரை பாடியதில்லை என்று ஷோபா, அந்த கால கட்டத்தில் கொடுத்த பேட்டியில் கூட கூறியிருந்தார். அது போல் ஒன்ஸ்மோர் படத்திற்காக ஊர்மிளா ஊர்மிளா என்ற பாடலையும் விஜய்யுடன் சேர்ந்து பாடியுள்ளார். தனது சகோதரர் எஸ்.என்.சுரேந்தருடன் "அவள் ஒரு பச்சைக் குழந்தை" என்ற படத்திற்காக "மாலை இல்லா மனதில்" என்ற பாடலை பாடியிருந்தார்.
இரு மலர்கள்
இவர் "இரு மலர்கள்" என்ற படத்திற்காக "மகாராஜா ஒரு மகாராணி" எனும் பாடலை பாடியுள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகரின் படங்களுக்கு கதைகளை எழுதியுள்ளார். ஷோபா பின்னணி பாடகி மட்டுமல்ல, திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என்ற பன்முக திறமைகளை பெற்றுள்ளார்.
வேறு என்ன பாட்டுகள்
அந்த வகையில் "கோடம்பாக்கம் ஏரியா" பாடலை கூட ஷோபாதான் பாடியிருந்தார். மேலும் "வேட்டைக்காரன்" படத்தில் "என்உச்சி மண்டையில் சுர்ர்னுதே" பாடலையும் , "சுறா" படத்தில் "நான் நடந்தால் அதிரடி" பாடலையும் கூட ஷோபா பாடியிருந்தார். தவெகவை விஜய் தொடங்கியதில் இருந்து கொடி அறிமுகம், மாநாடு, பொதுக் கூட்டங்களில் ஷோபாவும் சந்திரசேகரும் பங்கேற்று வருகிறார்கள்.
கோயிலில் பிரார்த்தனை
தனது தாய்க்காக கொளத்தூரில் விஜய் கட்டிக் கொடுத்த சாய்பாபா கோயிலில் தனது மகனின் வெற்றிக்காக ஷோபா பிரார்த்தனை செய்து வருகிறார். அவரது பிறந்தநாளின் போது ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கினார்.












Click it and Unblock the Notifications