இம்ரான் கானை துளைத்த துப்பாக்கி குண்டு.. இந்தியாவின் ‛‛ரியாக்சன்’’ என்ன தெரியுமா? இதோ விபரம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுடப்பட்டதில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காலில் குண்டு பாய்ந்தது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தான் இந்த சம்பவம் தொடர்பாக இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் அரசியலில் நுழைந்தார்.
பாகிஸ்தான் தெக்ரி இ-இன்ஷெப் (பிடிஐ) எனும் கட்சியை இம்ரான் கான் துவங்கினார். கடந்த 2018 ல் நடந்த அந்நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் அவரது கட்சி மாபெரும் வெற்றி பெற்றது.

பதவியை இழந்த இம்ரான் கான்
இதனால் இம்ரான் கான் பிரதமரானார். இந்நிலையில் இம்ரான் கானின் கூட்டணி ஆட்சியில் இந்த ஆண்டின் துவக்கத்தில் குழப்பம் ஏற்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான் கான் ஆட்சியையும், பிரதமர் பதவியையும் இழந்தார். இதையடுத்து புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் ( பிஎம்எல்-என்) கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார்.

ஆளும் கட்சி மீது தொடர் புகார்
இந்நிலையில் ஷெபாஸ் ஷெரீப் அரசை இம்ரான் கான் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். நாட்டில் பொருளாதார நெருக்கடியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் தினமும் பாதிக்கப்படுகின்றனர் என தொடர்ந்து இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியினர் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் பல இடங்களில் தொடர்ந்து ஆளும் கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தப்பட்டு வருகிறது.

இம்ரான் கானை துளைத்த குண்டு
இதன் ஒருபகுதியாக ஷெபாஸ் ஷெரீப் மகனின் ஆட்சி நடக்கும் பாகிஸ்தானின் பஞ்சாப் மகாணம் வஜிராபாத்தில் நடந்த பிரமாண்ட பேரணியில் இம்ரான் கான் பங்கேற்றார். அப்போது கண்டெய்னரில் நின்று பேசிய இம்ரான் கான் மீது துப்பாக்கியால் சுடப்பட்டது. இதில் இம்ரான்கானின் காலில் குண்டு பாய்ந்தது. தற்போது இம்ரான் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அபாயகட்டத்தை தாண்டியதாக டாக்டர்கள் கூறி உள்ளனர். இருப்பினும் பாகிஸ்தானில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்ட நபரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தியா ரியாக்சன்
இந்நிலையில் தான் இம்ரான் கான் மீது துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் குறித்து இந்திய வெளியுறவுத்துறையிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ‛‛ திடீரென்று இது நடந்துள்ளது. பாகிஸ்தானில் நடந்த சம்பவத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அங்கு நடக்கும் நிகழ்வுகளை தொடர்ந்து கண்காணிக்க உள்ளோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications