1000 நாட்கள் விண்வெளியில் இருந்த விஞ்ஞானி யார்? இதோ டாப் 10 பட்டியல்! Space King ரஷ்யா!

Subscribe to Oneindia Tamil

நாசா: சுனிதா வில்லியம்ஸ் போவதற்கு முன்பே 7 பேர் விண்வெளியில் வெகு நாட்களாக தங்கி இருக்கின்றனர் என்றும் ஆகவே, சுனிதாவுக்கு மட்டுமே பிரச்சினை வரும் என யாரும் அச்சப்படத் தேவை இல்லை என்றும் தமிழக விஞ்ஞானி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார் என்பது மிகப்பெரிய செய்தியாக மாறி இருக்கிறது. அவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அதிகம் பேர் எழுதி வருகின்றனர். வெறும் 8 நாட்கள் பயணமாகச் சர்வதேச விண்வெளி மையத்திற்குப் பறந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், கடந்த 2 மாதங்கள் ஆன பின்னரும் இன்னும் பூமி திரும்பாமல் அங்கேயே சிக்கித் தவித்து வருகிறார்.

Sunita Williams NASA

அவரை பூமிக்கு அழைத்துவரப் பல முயற்சிகளை நாசா மேற்கொண்டுள்ளது. பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ உயரத்திலுள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்குப் பலமுறை விண்வெளி வீரர்கள் சென்று ஆய்வு செய்து வருவது வழக்கமானதுதான். முன்னதாக இந்தப் பணிகளை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மேற்கொண்டு வந்தது.

ஆனால், சமீப காலமாக இந்த வேலைகளை தனியார் வசம் ஒப்படைத்தது நாசா. போயிங் என்ற நிறுவனம் அதற்காக தேர்வு செய்யப்பட்டது. இது இந்தத் துறையைப் பொறுத்தவரை முன் அனுபவம் கொண்ட நிறுவனமாகும். ஆகவே மிகத் தைரியமாக விண்வெளி பயணத்தை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளிக்கு 8 நாட்கள் பயணமாக அனுப்பப்பட்டனர். அவர்கள் கடந்த 2 மாதங்களாகப் பூமிக்குத் திரும்ப முடியாதபடி இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது.

ஆகவே, சுவாசிக்க காற்று, நீர், உணவுகளை இயல்பாக உண்ண முடியாமல் இயற்கைக்கு மாறாக இந்த வீரர்கள் விண்வெளியில் வாழ்ந்து வருவதால் உடலுக்கு மருத்துவ ரீதியாகப் பல பிரச்சினைகள் வரலாம் எனப் பல செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன.

இந்த அச்ச உணர்வு நியாயமானதா? உண்மையில் என்ன நடக்கும்? ஆகிய விசயங்கள் குறித்து பஞ்சாப் மாநிலம் மோஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்களில் (Indian Institutes of Science Education and Research) பணியாற்றி வரும் தவி வெங்கடேஸ்வரன் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர்,"சுனிதா வில்லியம்ஸ் பற்றி நிறைய கற்பனையான செய்திகள் வருகின்றன. நிறைய பேர் ஊகத்தின் அடிப்படையில் பல தகவல்களைப் பரப்புகின்றனர். சுனிதாவுக்கு இந்தியாவுடன் ஒரு உறவு உள்ளதால் நம் நாட்டில் உள்ள அதிகம் பேர் அவரைப் பற்றி கவலை கொள்கிறார்கள். என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். அவருடன் வில்மோர் சென்றுள்ளார். அவரைப் பற்றியும் பலர் பேசி வருகின்றார்கள். இதில் கவனிக்க தவறிய விசயம் என்னவென்றால், இந்த இருவரும் விண்வெளிக்குப் போவதற்கு முன்பே 7 பேர் விண்வெளியில் வாழ்ந்து வருகிறார்கள்.

Sunita Williams NASA

விண்வெளியில் நீண்ட காலம் தங்கினால், உடல்ரீதியாக சில பிரச்சினைகள் ஏற்படும் என்பது சரியான தகவல்தான். இந்தப் பாதிப்பு சுனிதாவுக்கு மட்டும் ஏற்படப் போவது இல்லை. யார் போய் தங்கினாலும் ஏற்படும். இவருக்கு முன்பே தங்கியுள்ளவர்களுக்கும் பல பிரச்சினைகள் எதிர்காலத்தில் வரக்கூடும். இதற்கு முன்னதாக இத்தனை நாட்கள் விண்வெளியில் தங்குவதற்கு அனுமதி தரமாட்டார்கள். இரண்டு மூன்று நாட்களில் திரும்பும்படி தான் திட்டத்தை வகுப்பார்கள். ஆனால், அங்கே மனிதன் வசிக்க முடியுமா? அதற்கான சூழல் இருக்கிறதா? என ஆராய்வதற்காகத்தான் இவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

இப்போது அறிவியல் முன்னேற்றம் காரணமாக அதிக நாட்கள் தங்கு ஆராய்ச்சி செய்ய தொடங்கி உள்ளார்கள். இதற்கு முன்னதாக ஒருவர் 700 நாட்கள் வரை விண்வெளியில் தங்கி இருக்கிறார். ஒருவர் பல முறை விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்டதன் மூலம் மொத்தம் 1000 நாட்கள் தங்கி இருந்துள்ளார். உடல் பயிற்சி மூலம் பாதிப்பு வராத அளவுக்குப் பார்த்துக் கொள்வார்கள். அதற்கு என்று தனிப்பயிற்சிகள் உள்ளன. அதைப் போல சுனிதாவையும் செய்யச் சொல்வார்கள்" என்கிறார்.

சரி, இதுவரை அதிக நாட்கள் விண்வெளியில் தங்கிய வீரர் யார்? வேறு சிலர் அதிகபட்சம் எத்தனை நாட்கள் தங்கி உள்ளனர்?

Oleg Kononenko என்ற ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியாளர் 1078 நாட்கள் தங்கி இருக்கிறார். இதற்காக அவர் 5 முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இவருக்கு இப்போது 60 வயதாகிறது. இப்போது விஞ்ஞானியாக வேலை பார்த்து வருகிறார். அடுத்ததாக அதிக நாட்கள் விண்வெளியில் தங்கிய பெருமையும் ரஷ்ய விஞ்ஞானியைத்தான் சேரும். அவர் Gennady Padalka. அவர் 878 நாட்கள் தங்கி உள்ளார். இவரும் இதற்காக 5 முறை பயணம் மேற்கொண்டவர்தான். மூன்றாம் இடத்தில் இருக்கும் Yuri Malenchenko 827 நாட்கள் தங்கி இருக்கிறார். இவரது மொத்த பயணம் 6ப் முறையாகும். இவர் இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். விஞ்ஞானியாக இல்லை. இவரும் ரஷ்ய நாட்டு விஞ்ஞானிதான். ஆக, இதுவரை அதிக நாட்கள் விண்வெளியில் தங்கிய விஞ்ஞானிகள் அனைவரும் ரஷ்யாவை சேர்ந்தவர்கள்தான்.

பூமியில் மிகப்பெரிய வல்லரசாக அமெரிக்கா இருந்தாலும் விண்வெளியில் ரஷ்ய கொடிதான் உயரத்தில் பறக்கிறது. 4வது இடத்தில் உள்ள Sergei Krikalev 6 முறை பயணம் மேற்கொண்டு 803 நாட்கள் தங்கி உள்ளார். 5ஆவது இடத்தில் உள்ள Aleksandr Kaleri 5 முறை பயணம் செய்து 769 நாட்கள் இருந்துள்ளார். 6வது இடத்தில் உள்ள Sergei Avdeyev மூன்று முறை பயணத்தின் மூலம் 747 நாட்கள் தங்கி இருக்கிறார். 7 இடத்தில் உள்ள Anton Shkaplerov 4 முறை விண்வெளிக்குச் சென்று 709 நாட்கள் தங்கி இருக்கிறார். 8வது இடத்தில் Valeri Polyakov இரண்டே முறை பயணம் செய்து 678 நாட்கள் தங்கி இருக்கிறார். இவர் ரஷ்யா மற்றும் சோவியத் யூனியன் மூலம் அனுப்பப்பட்ட விஞ்ஞானி ஆவார்.

இதற்கு முன்பாக இரண்டு முறை சோவியத் யூனியனுடன் சேர்ந்து ரஷ்யா விண்வெளிக்கு விஞ்ஞானிகளை அனுப்பி உள்ளது. விண்வெளியில் அதிக நாட்கள் தங்கிய விஞ்ஞானிகள் பட்டியலைப் பொறுத்தவரை 9வது இடத்தில்தான் அமெரிக்கா உள்ளது. அந்நாட்டு விஞ்ஞானி Peggy Whitson மொத்தம் 675 நாட்கள் விண்வெளியில் இருந்துள்ளார். அதற்காக 4 முறை பயணம் செய்துள்ளார். மீண்டும் 10வது இடத்தை ரஷ்ய நாடுதான் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் ராஷ்யா, சோவியத் யூனியன், அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், லண்டன் ஆகிய நாடுகளே இடம்பெற்றுள்ளன. அதில் ரஷ்யாவை அடித்துக் கொள்ள முடியாத அளவுக்கு அது முன்னணியில் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+