பப்ளிக்ல பெண்கள் இனி சத்தமா பேசவோ, பாடவோ கூடாது.. ஆப்கானிஸ்தானில் அதிரடி சட்டம்
காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பெண்கள் பொது வெளியில் இனிமேல் சத்தமாக பாடுவதற்கும், பேசுவதற்கும் தடை விதித்து புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தலிபான்களின் இந்த நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. உள்ளிட்ட உலகில் உள்ள பல்வேறு சமூக அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தனர். ஆட்சிக்கு வந்ததில் இருந்து தாலிபான்கள் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெண்கள் தனியாக வெளியே நடமாடக் கூடாது, வேலைக்கு செல்லக் கூடாது, வெளியே சென்றாலும் வீட்டு ஆண்களின் துணையுடன்தான் செல்ல வேண்டும்.

பெண்கள் வெளியில் செல்லும்போது முகம் உள்பட உடல் முழுவதும் மறைக்கக்கூடிய வகையில் உடை அணிந்து செல்ல வேண்டும். உயர்நிலைப் பள்ளிகளுக்கு மாணவிகளுக்கு அனுமதி இல்லை, தொடக்கப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியான வகுப்புகள் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பெண்கள் தங்களுடைய புகைப்படங்களை வெளியில் அனுப்பக் கூடாது. இசைக் கருவிகளை இசைக்கக் கூடாது. தனியாக பயணிக்க கூடாது. குடும்ப உறுப்பினர் தவிர வேறு யாருடனும் பயணிக்கக் கூடாது போன்ற சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன. அதேபோல, பூங்காக்களுக்கும் ஆண்களும், பெண்களும் தனித்தனியாகத்தான் செல்ல வேண்டும்.
வாரத்தில் முதல் 3 நாட்கள் பெண்களும், வார இறுதி நாட்கள் உள்பட 4 நாட்களில் ஆண்களும் பூங்காக்களுக்குச் செல்லலாம். திருமணமான தம்பதிகளும் சேர்ந்து பூங்காவுக்கு செல்லக் கூடாது. குடும்ப உறுப்பினராக இருந்தாலும் ஆண்கள், பெண்கள் தனியாகத்தான் செல்ல வேண்டும். ஆண் மருத்துவர்களிடம் பெண்கள் சிகிச்சைக்காக செல்லக் கூடாது.
விமான பயணங்களிலும் ஆண்கள், பெண்கள் தனித்தனியாகத்தான் பயணம் மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. ஆப்கனில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கெல்லாம் உலக நாடுகள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொதுவெளியில் சத்தமாகப் பேசுவதற்கும், பாடுவதற்கும் தடை விதித்து புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
நல்லொழுக்கத்தைப் பேணும் வகையில் இந்த இஸ்லாமிய சட்டம் அமல்படுத்தப்படுகிறது என்றும், சட்டத்தை மீறினால் நடவடிக்கை எடுக்கவும் இந்த சட்டடத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார். இந்த புதிய சட்டத்தின் மூலமாக பெண்கள் சமூக நடவடிக்கைகள், கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தலிபான்களின் பெண்களுக்கு எதிரான இந்த சட்ட நடவடிக்கைகளுக்கு ஐ.நா. உள்ளிட்ட உலகில் உள்ள பல்வேறு சமூக அமைப்புகள் குரல் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications