பழிக்குப்பழி.. உறைய வைத்த இரட்டை கொலை! காஞ்சிபுரம் அருகே ஊராட்சித் தலைவரை கொன்ற 8 பேர் கைது
காஞ்சிபுரம்: மணிமங்கலம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரர்கள் 3 பேர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(45). மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக இவர் பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் ராகவேந்திரா நகர் பாலம் அருகே சம்பவத்தன்று இரண்டு பேருடன் வெங்கடேசன் பேசிக் கொண்டு இருந்தார்.

மர்ம கும்பல்
அப்போது அங்கு மறைந்து இருந்த மர்ம நபர்கள் வெங்கடேசன் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்கி இருக்கின்றனர். நாட்டு வெடிகுண்டு வீச்சில் படுகாயமடைந்து கீழே சரிந்தார் வெங்கடேசன். உடனே அவர் அருகே சென்ற 8 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி, வீச்சு அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு துடிக்க துடிக்க வெட்டி சென்றது.

வெட்டிக்கொலை
இதனால் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் படுகாயமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அவரை படுகொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

8 பேர் கைது
அங்கு வந்து வெங்கடேசனின் உடலை மீட்ட அவர்கள், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில் சகோதரர்கள் மூவர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்து உள்ளார்.

முன்பகை
கைதான முகமது சதாம் உசேன் (25), முகமது இம்ரான்கான் (21), முகமது ரியாசுதீன் (27), தனுஷ் (26), மணிமாறன் (25), அகமது பாஷா (21), மோகன்ராஜ் (20) உட்பட 8 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்டமான நடத்தப்பட்ட விசாரணையில் முன்பகை காரணமாக இந்த கொலை நடைபெற்றது தெரியவந்தது.

இரட்டை கொலை
கடந்த சில நாட்களுக்கு இதே மணிமங்கலம் பகுதியில் இரட்டை கொலை நடந்து இருக்கிறது. அந்த கொலைகளின் பின்னணியில் மூளையாக வெங்கடேசன் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரை கொலை செய்ததாக 8 பேரும் கூறி உள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications