"நான் வந்துட்டேன்.." பிறந்தவுடன் பேசிய குழந்தை.. 'எப்புட்றா' வியந்து போன காஞ்சிபுரம்! என்ன நடந்தது
காஞ்சிபுரத்தில் பிறந்தவுடன் குழந்தை பேசியதாகத் தகவல் பரவி வருகிறது.
காஞ்சிபுரம்: அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பிறந்த சில நிமிடங்களிலேயே குழந்தை ஒன்று பேசியதாகத் தகவல் பரவி வருகிறது. இதற்கிடையே இது குறித்து மருத்துவர்களும் விளக்கமளித்துள்ளனர்.
பொதுவாகக் குழந்தை பிறந்தவுடன் முதலில் அழுகவே செய்யும். சொல்லப்போனால் பிறந்தவுடன் நிச்சயம் குழந்தை அழுக வேண்டும்.. இல்லையென்றால் தான் பிரச்சினை என்பது மருத்துவர்களின் கருத்து.
அழுக மட்டுமே செய்யும் குழந்தை, நன்கு பேசக் குறைந்தது சில ஆண்டுகள் ஆகிவிடும். இதனிடையே காஞ்சியில் பிறந்த பச்சிளம் குழந்தை பேசியதாகப் பரவிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள சின்ன அழிசூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சந்திரன் - ரேவதி. கூலி வேலை செய்து வரும் அந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு வயதில் ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. இதற்கிடையே இரண்டாவது முறையாக ரேவதி கர்ப்பமடைந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரேவதிக்கு நேற்று காலை 8 மணி அளவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டதாகத் தெரிகிறது.

ஆண் குழந்தை
இதையடுத்து அவரை களியாம்பூண்டி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர் சரண்ராஜ், நர்ஸ் பிருந்தா ஆகியோர் பிரசவ வலியுடன் வந்த ரேவதியை பரிசோதனை செய்துள்ளனர். மேலும், பிரசவத்திற்கு தேவையான ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். இதையடுத்து காலை 10 மணியளவில் ரேவதிக்கு ஆண் குழந்தை சுகப் பிரசவத்தில் பிறந்துள்ளது. 2.9 கிலோ எடையுடன் இந்த குழந்தை ஆரோக்கியமான உடல்நிலையில் இருந்துள்ளது.

பேசிய அதிசயம்
அப்போது தான் அந்த அதிசயமான சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. எப்போதும் பிறந்தவுடன் குழந்தை அழவே செய்யும். ஆனால், ரேவதிக்கு பிறந்த அந்த ஆண் குழந்தை, "நான் வந்துட்டேன்" என்று சொல்லியதாகக் கூறப்படுகிறது. பிறந்த உடன் குழந்தை இப்படிச் சொல்லியுள்ளது.. செவிலியர், தூய்மை பணியாளர் என அங்கிருந்த அனைவருக்குமே இப்படி தான் கேட்டுள்ளது. பிரசவ அறை அருகிலும் அப்போது யாரும் இல்லை.

பரவிய தகவல்
அருகே இருந்த வேறு யாராவது சொன்னார்களா என்றும் கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து அருகிலும் நன்கு செக் செய்துள்ளனர். இருப்பினும் வேறு யாருமே அங்கு இல்லை. பிறந்த சில நிமிடங்களே ஆன அந்த குழந்தை பேசியது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பிறந்த குழந்தை பேசிய தகவல் இணையத்தில் பரவிய நிலையில், அக்கம்பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கும் இந்த தகவல் பரவியது. இதையடுத்து பலரும் அந்த குழந்தையை வந்து பார்த்துச் செல்கின்றனர்.

விளக்கம்
இந்தச் சம்பவம் இணையத்திலும் பெரியளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இருப்பினும், பிறந்தவுடன் இப்படி குழந்தை பேச வாய்ப்பே இல்லை என்று மருத்துவர்கள் மறுக்கிறார்கள். ஒரு குழந்தை பேசத் தொடங்கவே மாதக் கணக்கில் ஆகும் என்று குறிப்பிடும் மருத்துவர்கள், குழந்தையின் முனங்கல் அப்படி காதில் விழுந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். இருப்பினும், முனங்கலாக்க இருந்தால்.. அங்கிருந்த அனைவருக்கும் எப்படி ஒரே போல "நான் வந்துட்டேன்" என்று கேட்டிருக்கும் என்று உறவினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.












Click it and Unblock the Notifications