"தலையெழுத்தே" மாறும்! செக் வைக்கும் எடப்பாடி.. ரெடியாகும் பிளான்! அதிமுக முன்னாள் அமைச்சர் சூசகம்
காஞ்சிபுரம்: அதிமுகவில் தலைமை குறித்த குழப்பம் தொடரும் நிலையில், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.
அதிமுக இப்போது இரு பிரிவுகளாக இயங்கி வருகிறது. ஓபிஎஸ் மற்றும் எடப்பாடியின் இரட்டை தலைமையில் இயங்கி வந்த அதிமுகவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒற்றை தலைமை என்ற கோஷம் எழுந்தது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார். அப்போது முதலே இரு தரப்பும் தனித்தே இயங்கி வருகிறது.
திமுகவை வீழ்த்த டிடிவி தினகரன் கட்சியுடன் அதிமுக கூட்டணியா?.. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பரபர பதில்

அதிமுக
அதிமுக தொண்டர்கள் அனைவரும் தங்கள் பக்கமே இருப்பதாக இரு பிரிவினரும் தொடர்ந்து கூறி வருகின்றனர். இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு விழா மற்றும் 51ஆம் ஆண்டு தொடக்க விழாவைப் பிரம்மாண்டமாக நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

ஆலோசனை
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான வி.சோமசுந்தரம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்டச் செயலாளர் வி.சோமசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் பொன்விழா நிறைவு விழாவை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

பூஜ்ஜியம்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான வி.சோமசுந்தரம், "திமுக ஆட்சி அமைந்து 16 மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரை காஞ்சிபுரத்திற்கு என்று எந்தவொரு திட்டத்தையும் அவர்கள் கொண்டு வரவில்லை. எந்தவொரு புதிய திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் பூஜ்ஜியமாகவே இந்த ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது.. இப்படிப்பட்ட ஒரு ஆட்சியை அதிமுக தொண்டர்களால் மட்டுமே முடிவுக்குக் கொண்டு வர முடியும்.

எடப்பாடி பழனிசாமி பிளான்
மிக விரைவில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மிகப்பெரிய கூட்டம் ஒன்று நடக்க உள்ளது. அந்த கூட்டம் மட்டும் நடந்தால் தமிழகத்தின் தலையெழுத்தே மாற்றி எழுதப்படும்.. அதன் பிறகு திமுகவால் எந்தவொரு தேர்தலிலும் வெல்ல முடியாத சூழல் ஏற்படும். எப்போதும் மக்களுக்காகவே இயங்கும் மாபெரும் இயக்கமாக அதிமுக மட்டும் தான் உள்ளது.

மாபெரும் வெற்றி பெரும்
அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் அதிமுகவே மாபெரும் வெற்றியைப் பெறும்.. லோக் சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தல் வந்தாலும் கூட எல்லா இடங்களிலும் அதிமுக தான் வெல்லும். அப்படியொரு சூழல் தான் அதிமுகவில் இப்போது உருவாகி இருக்கிறது. அதிமுகவை எந்தவொரு கட்சியாலும் எதிர்க்க முடியாது. அதற்கான சக்தியும் அவர்களுக்கு இல்லை. அதிமுகவின் தொண்டர்களின் பணி நிச்சயம் சிறப்பாகவே இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

அதிமுக பொன்விழா
அதிமுக பொன்விழா நிறைவு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த எடப்பாடி பழனிசாமி அணி திட்டமிட்டு உள்ளனர். மாவட்டம் முழுக்க பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த அவர்கள் திட்டமிட்டு உள்ளனர். அதிமுக தொண்டர்களை அதிக அளவில் இதில் பங்கேற்க வைத்து, தொண்டர்கள் தங்கள் பக்கம் இருப்பதை நிரூபிக்க எடப்பாடி தரப்பு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.