வேலூரை விடுங்க! காஞ்சிபுரத்தை காய வைத்த 111 டிகிரி வெயில்... இந்த சீசனில் இதுதான் அதிகம்
காஞ்சிபுரம்: வேலூரில் இன்று வெயிலின் தாக்கம் 108 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவான நிலையில் காஞ்சிபுரத்தில் அதைவிட அதிகமாக 111 டிகிரி ஃபரான்ஹிட் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் வெப்பம் தாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக காஞ்சிபுரத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் கடந்த 3 நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பநிலை அதிகபட்சமாக பதிவாகி உள்ளது.

இன்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் ஒரே நாளில் அதிகபட்சமாக 111 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆன்மீக சுற்றுலா தலமான காஞ்சிபுரத்தில் விடுமுறை நாளான இன்று காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவிலான பக்தர்கள் காஞ்சிபுரம் வருகை தருகின்றனர்.
அதிகளவிலான வெயில் சுட்டெரித்து வருவதன் காரணமாக பொதுமக்கள் சாலைகளில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் அலுவலகத்துக்கு செல்லும் பணியாளர்கள் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் வெயிலை தாக்குபிடிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் நேற்று 110 டிகிரி ஃபாரன்ஹீட், நேற்று முன்தினம் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் அதிகளவிலான வெப்பம் பதிவாகி வரும் மாவட்டமாக கருதப்படும் வேலூரிலேயே இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில்தான் வெப்பம் நிலவி இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகளவிலான வெப்பநிலை பதிவாகி உள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications