கல்லூரியில் அரசு பணிக்கு நியமன ஆணை.. குமரி இளைஞர்களுக்கு விபூதி அடித்த கும்பல்.. சிக்கியது எப்படி?
குமரி: நாகர்கோவிலில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 2 வாலிபர்களுக்கு ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு போலி பணி நியமன ஆணை கொடுத்து பண மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதேபோன்று மேலும் 13 பேரை இவர்கள் போலி பணி நியமன ஆணை கொடுத்து ஏமாற்றி மோசடி செய்ததையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில் கோணம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு சமீபத்தில் 2 இளைஞர்கள் பணி நியமன ஆணையுடன் வந்துள்ளனர். கல்லூரி முதல்வர் நாகராஜனை சந்தித்து கேட்டு இருக்கின்றனர். அந்த இளைஞர்கள் வைத்திருந்த பணி நியமன ஆணையில் கல்லூரி முதல்வரின் கையெழுத்து, சீல் இருந்துள்ளது.

போலி பணி நியமன ஆணை
இதனால் ஒரு நிமிடம் அதிர்ந்து போன கல்லூரி முதல்வர், வேலைவாய்ப்பு அறிவிப்பு ஏதும் விடப்படவில்லை என்றும், யாருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் உங்களை ஏமாற்றி இருக்கிறார்கள் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் சென்றுவிட்டனர். எனினும் கல்லூரி முதல்வர் இது தொடர்பாக ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில், "நாகர்கோவிலில் கோணம் என்ஜினீயரிங் கல்லூரியில் ஆசிரியர் அல்லாத பணியாளர் வேலைக்கு மாதவலாயம் பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்களுக்கு போலியாக பணி ஆணை வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த பணி நியமன ஆணையில் கல்லூரி முதல்வராகிய எனது பெயரில் போலியாக கையெழுத்து இடப்பட்டு, அலுவலக முத்திரைகளும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
சிக்கிய 3 பேர்
அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சி செய்துள்ளது குறித்தும், போலி பணி ஆணை கொடுத்தது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். போலி பணி நியமன ஆணையில் அலுவலக முத்திரை மற்றும் எனது கையெழுத்தை போலியாக தயார் செய்து பயன்படுத்தி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து நாகர்கோவில் உட்கோட்ட போலீஸ் உதவி சூப்பிரண்டு லலித் குமார் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா விசாரணையை தொடங்கினார். இதில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 50) மற்றும் திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டையை சேர்ந்த முகமது இஸ்மாயில் (51), பாபு (42) ஆகிய 3 பேர் சேர்ந்து தான் இந்த மோசடியை அரங்கேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
15 பேரிடம் பண மோசடி
இவர்கள் 3 பேரும் போலி பணி நியமன ஆணை வழங்கி 2 இளைஞர்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் திண்டிவனம், புதுச்சேரி சென்று 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர் சாதனங்கள், முத்திரை வைக்க பயன்படுத்திய ரப்பர் ஸ்டாம்ப், போலி பணி நியமன ஆணைகள் போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களை குமரிக்கு அழைத்து வந்தனர்.
இதையடுத்து அவர்கள் 3 பேரிடமும் நடத்திய விசாரணையில், தமிழகம் முழுக்க 15 பேரிடம் இவர்கள் இதே பாணியில் ஏமாற்றி பணம் மோசடி செய்துள்ளனர். தங்களிடம் அறிமுகமாகும் வேலை தேடும் இளைஞர்களிடம் தங்களுக்கு தெரிந்த ஆட்கள் இருப்பதாகவும், கொஞ்சம் பணம் கொடுத்தால் போதும் பணியை உங்களுக்கு வழங்குவோம் என கூறி பண மோசடி செய்து இருக்கிறார்கள். குமரியைச் சேர்ந்த 2 இளைஞர்களில் ஒருவரிடம் ரூ.2 லட்சம் பறித்து இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications