கூட்டுறவு வங்கி தங்க நகைகள்.. லாக்கரையே நகர்த்திய கும்பல்! விலகிய கால் நூற்றாண்டு கன்னியாகுமரி மர்மம்
கன்னியாகுமரி: சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடந்து வந்த சட்டப் போராட்டம், ஒன்று குற்றவாளிகளுக்கான தண்டனையுடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்த தீர்ப்பானது கன்னியாகுமரி மாவட்ட மக்களின் கவனத்தையும் பெற்று வருகிறது.. 25 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தில், அதிலும் போலீசாருக்கு மிகவும் சவாலாக இருந்த இநத் வழக்கில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை, மண்டைக்காடு பகுதி மக்கள் வரவேற்றுள்ளனர்.. அப்படி என்ன நடந்தது?
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ளது அழகன்பாறை.. இந்த பகுதியில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது..

கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, 1999ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி, அழகன்பாறை கூட்டுறவு வங்கியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது..
சம்பவத்தன்று வங்கியின் செயலர் சிங்காராஜன் வழக்கம்போல பணிகளை முடித்துவிட்டு வங்கியை பூட்டிக்கொண்டு கிளம்பி சென்றார்...
கூட்டுறவு வங்கி தங்க நகைகள்
மறுநாள் காலை ரேஷன் கடை ஊழியர் ராபர்ட் என்பவர் கடைக்கு வந்தபோது, வங்கியின் ஷட்டர் மற்றும் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, வங்கியின் லாக்கர் அப்படியே தூக்கி செல்லப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த லாக்கரில் 23.5 கிலோ தங்க நகைகளும், சுமார் 90 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் இருந்தன.
உடனடியாக இது குறித்து மண்டைக்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் இறங்கிய காவல்துறையினர், அழகன்பாறை அருகே உள்ள குளக்கரையில் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்த வங்கி லாக்கரை மீட்டனர். ஆனால் கொள்ளையர்களை பிடிப்பதில் சற்று சிக்கல் ஏற்பட்டது.. காரணம், கொள்ளையர்கள் மிக கச்சிதமாக திட்டமிட்டு அந்த கொள்ளையில் செயல்பட்டிருந்தனர்.
சவாலான கேஸ்
இரவு நேரத்தில் வங்கியின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே நுழைந்தவர்கள், நேராக லாக்கர் அறைக்கு சென்றுள்ளார்.. எந்த தடயமும் சிக்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்த அவர்கள், நகைகளையும் ரொக்கப் பணத்தையும் சுருட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்துள்ளனர்..
உடைந்த பூட்டுகள், அங்கிருந்த சில கால் தடயங்களை மட்டுமே வைத்துக்கொண்டு விசாரணையை போலீசார் தொடங்கினர்.. எனவே இது ஒரு சவாலான வழக்காகவே அப்போது போலீசாருக்கு இருந்தது.
ரகசிய கண்காணிப்பு
இந்த கொள்ளை நடந்த அதே சமயத்தில், அக்கம் பக்கத்து ஊர்களில் நடந்த இதே பாணியிலான திருட்டு சம்பவங்களையும் ஒப்பிட்டு பார்த்தபோது, காவல்துறையினருக்கு ஒரு தெளிவு கிடைத்தது... அந்த சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை ரகசியமாகக் கண்காணித்தபோது, அவர்கள் கொள்ளையடித்த நகைகளை ரகசியமாக விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
பிடிபட்டவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில்தான் மொத்தமாக மாட்டிக் கொண்டார்கள்.. இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டதாக ஆறுமுகம் (எ) விஜயன், பச்சைமால், ஜெயச்சந்திரன், அருள்ராஜன், ராஜேஷ், ஸ்டார்வின்ராஜ், செந்தில்குமார் உள்ளிட்ட 11 பேரை போலீசார் அதே ஆண்டில் சுற்றி வளைத்து கைது செய்தனர். வெல்டிங் மிஷினை பயன்படுத்தி வங்கியின் கதவு மற்றும் லாக்கரை உடைத்து அவர்கள் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் உறுதியானது.
நீண்ட கால விசாரணை மற்றும் தீர்ப்பு
இந்த வழக்கு இரணியல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 27 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.. நீண்டகாலமாக நடைபெற்று வந்த இந்த விசாரணையின் காலக்கட்டத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் பாலசுப்பிரமணியன், ஜேம்ஸ்ராஜன், தேவதாஸ் மற்றும் செல்வநாயகம் ஆகிய 4 பேருமே உயிரிழந்து விட்டனர்.. அதேபோல், வழக்கின் புகார்தாரரான வங்கி செயலர் சிங்காராஜனும் இறந்துவிட்டார்..
இப்படிப்பட்ட சூழலில்தான், வழக்கை விசாரித்த நீதிபதி அமீர்தீன் தற்போது இறுதித் தீர்ப்பை வழங்கி உள்ளார்.. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஆறுமுகம், பச்சைமால், ஜெயச்சந்திரன், அருள்ராஜன், ராஜேஷ் மற்றும் ஸ்டார்வின்ராஜ் ஆகிய 6 பேருக்கு தலா 6 வருட காலம் கடுங்காவல் சிறைத்தண்டனையும், தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்..
மற்றொரு குற்றவாளியான செந்தில்குமாருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது...
சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்ற இந்த சட்டப் போராட்டம், தற்போது குற்றவாளிகளுக்கான தண்டனையுடன் முடிவுக்கு வந்துள்ளது. 7 பேருக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து இரணியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை குமரி மக்கள் வரவேற்றுள்ளனர்..!!












Click it and Unblock the Notifications