இந்திய ராணுவ கல்லூரியில் 8ம் வகுப்பில் குழந்தைகளை சேர்ப்பது எப்படி.. கன்னியாகுமரி கலெக்டர் பதில்
கன்னியாகுமரி: டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜனவரி 2026-ம் ஆண்டிற்கான 8-ம் வகுப்பில் மாணவர்கள் (சிறுவர் மற்றும் சிறுமியர்கள்) சேருவதற்கான தேர்வு சென்னை உள்ளிட்ட குறிப்பிட்ட சில மையங்களில் ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் சேர விரும்பும் தமிழக மாணவர்கள் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா விளக்கம் அளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: "டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜனவரி 2026-ம் ஆண்டிற்கான 8-ம் வகுப்பில் மாணவர்கள் (சிறுவர் மற்றும் சிறுமியர்கள்) சேருவதற்கான தேர்வு சென்னை உள்ளிட்ட குறிப்பிட்ட சில மையங்களில் ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்வு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும். இதற்கான விண்ணப்பத்தை ராஷ்டிரிய இந்திய ராணுவக்கல்லூரியின் இணையவழித்தளம் www.rimcgov.in மூலமாக பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பதாரர் வருகிற 1-1-2026 அன்று 11 வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர் ராணுவ கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும் போது, அதாவது 1-1-2026-ல் அங்கீகரிக்கப்பெற்ற பள்ளியில் 7-ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயச் சாலை, பூங்கா நகர், சென்னை 600003 என்ற முகவரிக்கு வருகிற மார்ச் மாதம் 31-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும், விவரங்களுக்கு ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியின் இணையதள முகவரியை பார்க்கலாம்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு: 2025-26-ம் கல்வியாண்டுக்கான மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத் தேர்வு வருகிற மே மாதம் 4-ந்தேதி நடைபெற உள்ளது.அதற்கு எப்படி விண்ணப்பிக் கவேண்டும்.. எவ்வளவு கட்டணம் என்பதை பற்றி பார்ப்போம்.. நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும், மற்றும் இயற்கை மருத்துவப்படிப்புகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கையும் 'நீட்' நுழைவுத் தேர்வுகள் அடிப்படையில் நடத்தப்படும்.
அந்த வகையில், 2025-26-ம் கல்வியாண்டுக்கான மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத் தேர்வு வருகிற மே மாதம் 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது. மாணவர்கள், https://neet.nta.nic.in, https://www.nta.ac.in/ ஆகிய இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (மார்ச்) 7-ந்தேதி நள்ளிரவு 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள மார்ச் 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
நீட் தேர்வுக்கான கட்டணமாக பொதுப்பிரிவுக்கு ரூ.1700-ம், பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.1,600-ம், எஸ்சி/எஸ்டி பிரிவுக்கு ரூ.1,000-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி மற்றும் சேவைக் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட உள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் ஏப்ரல் மாதம் 26-ந்தேதி வெளியிடப்படும் என்றும் 2025-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் வருகிற ஜூன் மாதம் 14-ந்தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications