கன்னியாகுமரியில் 45 மணிநேரம் தவமாய் தவமிருக்கப் போகும் பிரதமர் மோடி- 4 ஆயிரம் போலீசார் குவிப்பு!
கன்னியாகுமரி: பிரதமர் மோடி நாளை முதல் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தொடர்ந்து 45 மணிநேரம் தவமிருக்க உள்ளார். இதனையடுத்து கன்னியாகுமரியில் இன்று முதலே 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
லோக்சபா தேர்தலின் இறுதி கட்ட வாக்குப் பதிவு ஜூன் 1-ந் தேதி நடைபெற உள்ளது. ஜூன் 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. லோக்சபா தேர்தலின் இறுதி கட்டம், தேர்தல் முடிவுகள் வரப் போகிறது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி திடீரென நாளை முதல் 3 நாட்கள் தமிழ்நாட்டில் பயணம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் நாளை முதல் 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக பிரதமர் மோடி தவமிருக்க இருக்கிறார். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் புனிதத் தலம் சென்று தவமிருந்தார் மோடி.
1882-ல் சுவாமி விவேகானந்தர், கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். அப்போது ஸ்ரீபாத பாறையில் தவம் செய்ய விரும்பினார். ஆனால் விவேகானந்தரை அழைத்துச் செல்ல மீனவர்கள் தயாராக இல்லை. இதனால் கடலில் நீந்திச் சென்று ஸ்ரீபாத பாறையில் 3 நாட்கள் தவமிருந்தார் விவேகானந்தர். இதனாலேயே இந்த பாறை விவேகானந்தர் பாறையானது. இங்கு தியான மண்டபம் அமைக்கப்பட்டு சுற்றுலா தலமாக உருமாற்றப்பட்டுள்ளது. விவேகானந்தர் பாறைக்கு படகு மூலம் செல்ல வேண்டும். இந்த பாறை அருகேதான் வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழர் பெருமையை பறைசாற்றும் அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர சிலையை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நிறுவி உள்ளார். இதுவும் சுற்றுலாத் தலமாக உருமாறி இருக்கிறது.
தற்போது பிரதமர் மோடி, விவேகானந்தரைப் போல தொடர் தியானம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். விவேகானந்தர் பாறையில் மொத்தம் 45 மணிநேரம் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடுகிறார். மோடி கன்னியாகுமரி வருவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி கடல்பரப்பில் கடலோர காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே மோடியின் விவேகானந்தர் பாறை தவம் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை வலியுறுத்தி உள்ளார். மேலும் தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டுவோம் எனவும் அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications