ராகுல் காந்தியின் பாத யாத்திரை.. கோஷ்டி பூசலை ஒதுக்கிவைத்த தமிழக காங்கிரஸ்.. அதிர்ந்த குமரி!
கன்னியாகுமரி: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து நடத்தியுள்ளது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'ஒற்றுமைக்கான பயணம் ' என்ற பாத யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடங்கி உள்ளார். நாடு முழுவதும் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்கள் 3, 570 கிமீ தூரத்திற்கு யாத்திரையை மேற்கொள்கிறார்.
இதில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் தலைவர்கள் 120 பேர் நடைபயணம் மேற்கொள்கின்றனர். இதனை கன்னியாகுமரியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

3 முதல்வர்கள் பங்கேற்பு
அதில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், மல்லிகார்ஜுனா கார்கே உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, ஜோதிமணி உள்ளிட்டோரும், எம்எல்ஏ-க்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

கோஷ்பூ பூசல்
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். ஒவ்வொரு முறை காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி தமிழகம் வரும்போது, தமிழக காங்கிரஸ் கட்சியில் இருக்கும் கோஷ்டி பூசல் அப்பட்டமாக வெளியில் தெரியும்.

ஜெய்ராம் ரமேஷ்
ஆனால் இம்முறை கோஷ்டி பூசல் உள்ளிட்ட பிரச்னைகள் வரக் கூடாது என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் செப்டம்பர் முதல் வாரத்திலேயே தமிழக காங்கிரஸ் கட்சியினருக்கு அறிவுறுத்தினார். இதனாலேயே தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தர்ப்பில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாவட்டம் என்று பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன.

ஒற்றுமைப் பயணம்
இதன் காரணமாக கன்னியாகுமரியில் ராகுல் காந்தி வருகையின் போது பெருந்திரளாக தொண்டர்களின் அழைத்து வரப்பட்டனர். ராகுல் காந்தியின் பாத யாத்திரைக்காக தனித்தனியாக குழு அமைக்கப்பட்டு காங்கிரஸ் கட்சியினர் பணி செய்துள்ளனர். இதன்மூலம் பாத யாத்திரையின் முதல் நாள் பணிகள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செய்யப்பட்டதாக பார்க்கப்படுகிறது.
ஒருவழியாக தமிழக காங்கிரஸ் கட்சியினர் கோஷ்டி பூசலை ஓரம்கட்டிவிட்டு, ஒற்றுமை யாத்திரையை ஒற்றுமையாக தொடங்கியுள்ளனர். இது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications