அக்காள் கணவர் மீது கன்னியாகுமரி புதுமாப்பிள்ளைக்கு ஆத்திரம்.. நடுவில் போய் வாழ்க்கையை தொலைத்த நண்பன்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அடுத்த பூதப்பாண்டி அருகே உள்ள கிராமம் இறச்சகுளம் விஷ்ணுபுரம் காலனி. இந்த ஊரைச் சேர்ந்த பிரியதர்ஷினினை திருநெல்வேலி மாவட்டம் பழவூரைச் சேர்ந்த மணிகண்டன் திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின்னர் மனைவியின் ஊரிலேயே வசித்து வந்தார்.. இதனிடையே பிரியதர்ஷினியின் தம்பி விக்னேஷுக்கு அண்மையில் திருமணம் நடந்தது. இந்நிலையில நண்பர்களுடன் சேர்ந்து அக்காள் கணவரை தீர்த்துக்கட்டியுள்ளார் புதுமாப்பிள்ளை விக்னேஷ்.. என்ன நடந்து என்று பார்ப்போம்.
திருநெல்வேலி மாவட்டம் பழவூர் புதுகாலனி பகுதியை சேர்ந்த 43 வயதாகும் மணிகண்டன் பெயிண்டர் ஆவார். இவருடைய மனைவி பிரியதர்ஷினி (28). அவருடைய சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் விஷ்ணுபுரம் காலனியாகும். பிரியதர்ஷினி, கணவருடன் தனது சொந்த ஊரில் குடியேறி வசித்து வருகிறார். பிரியதர்ஷினி தனது தாய், தம்பி விக்னேஷ் என்ற விருமாண்டி (22) உடன் கூட்டு குடும்பமாகவே வசித்து வருகிறார்.

இதனிடைமேய விக்னேஷுக்கும், ஜிஸா (22) என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. கூட்டு குடும்பமாக வாழ்ந்ததால் வீட்டு வேலை செய்வதில் பெண்களுக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதில் விக்னேஷின் மனைவி ஜிஸா வீட்டு வேலைகள் எதுவும் சரிவர செய்வதில்லையாம். இதனால் ஒரு கட்டத்தில் விக்னேஷின் தாயார், ஜிஸாவை கண்டித்திருக்கிறார்
இந்த விவரத்தை கணவர் விக்னேஷிடம் தெரிவித்து ஜிஸா கதறி அழுதுள்ளார். உடனே விக்னேஷ், தனது தாயார், சகோதரி பிரியதர்ஷினியை கண்டித்ததோடு தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். இதனை பார்த்த மணிகண்டன் மைத்துனர் விக்னேஷை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் விக்னேஷ் கடும் ஆத்திரம் அடைந்தாராம்.
என் வீட்டில் தங்கியிருந்து எனக்கு எதிராக பேசுகிறாயா? என மணிகண்டனுக்கு எச்சரிக்கை விடுத்துவிட்டு சென்றாராம். பிறகு குடும்ப பிரச்சினை பற்றி தனது நண்பர்களான இறச்சகுளம் தென்றல் நகர் பகுதியை சேர்ந்த சுமன் (31), காட்டுப்புதூர் பிராமண கோணத்தை சேர்ந்த அஜின் குமார் (33) ஆகியோரிடம் பேசினாராம். அதே சமயத்தில் அக்காள் கணவர் மணிகண்டனுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என நண்பர்களிடம் கூறினாராம். மூவரும் சேர்ந்து மணிகண்டனை தாக்க திட்டமிட்டார்களாம். அதன்படி கடந்த ஜனவரி 3ம் தேதி இரவு மணிகண்டன் வீட்டில் இருந்துள்ளார். இதனை அறிந்த விக்னேஷ், நண்பர்கள் இருவரையும் அழைத்து சென்றிருக்கிறார். நண்பர்கள் இருவரும் அரிவாள், இரும்பு கம்பி ஆகியவற்றை வைத்துள்ளனர்.
வீட்டுக்குள் சென்ற வேகத்தில் 3 பேரும் மணிகண்டனை சரமாரியாக தாக்கி வெளியே இழுத்து வந்திருக்கிறார்களாம். இதில் சுமன், மணிகண்டனை திடீரென அரிவாளால் வெட்டினார். எனினும் ஆத்திரம் தீராத அஜின்குமார் இரும்பு கம்பியால் தாக்க, விக்னேஷும் கல்லால் தாக்கினாராம். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த மணிகண்டன் ரத்த காயங்களுடன் அங்கேயே சரிந்து விழுந்தார். சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டு வர 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
பிறகு மணிகண்டனை சிலர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த கொலை தொடர்பாக சுமன், அஜின்குமார், விக்னேஷ் ஆகிய 3 பேர் மீது பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். நண்பர்களுடன் சேர்ந்து அக்காள் கணவரை, புதுமாப்பிள்ளை வெட்டிக் கொன்ற சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே
கைதான சுமன், விக்னேஷ் இருவர் மீதும் கஞ்சா விற்றதாக வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளதாம். தற்போது கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் மினி பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்த அஜின்குமார் மீது எந்த குற்றவழக்கும் இல்லை. தற்போது தவறான நண்பர்கள் சகவாசத்தால் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications