பக்கா மார்கெட்டிங்..மனநலம் பாதித்து நிர்வாணமாய் சுற்றிய நபர்! சித்தர் என கூறி கல்லா கட்டிய கும்பல்!
கரூர் : கரூர் அருகே மனநலம் பாதித்து சாலையில் சுற்றித் திரிந்த நபரை சித்தர் என தகவல் பரப்பி கல்லா கட்டிய நபர்கள், அவருக்கு கோவில் கட்டுவதாகக் கூறி பலரிடம் லட்சக்கணக்கான ரூபாயை பெற்று மோசடி செய்துள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், இது தொடர்பாக கரூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மலைக்கோவிலூர் சித்தர், நெடுஞ்சாலை சித்தர், நிர்வாண சித்தர் என்ற பெயர்களில் நிர்வாண கோலத்தில் காட்சி அளிக்கும் முதியவர் ஒருவர் பக்தர்கள் வழங்கும் எதையும் ஏற்காமல் விபூதியை பிரசாதமாக வந்தார்.
கரூரிலிருந்து - மதுரை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அருகில் மலைக்கோவிலூர் என்னும் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் டிவைடர் பகுதியில் ஒரு திடீர் சாமியார் உருவாகி இருந்தார். இவரை பலரும் சமூக வலைதளங்களில் திட்டமிட்டு ட்ரெண்டாக்கினர்.
நீர் நிலையை மருவத்தூர் சித்தர் பீடம் ஆக்கிரமித்ததாக புகார்.. விளக்கம் கேட்டு ஹைகோர்ட் உத்தரவு

நெடுஞ்சாலை சித்தர்
மலைக்கோவிலூர் சித்தர், நெடுஞ்சாலை சித்தர் என்ற பெயர்களில் அழைக்கப்படும் இவர் நிர்வாண கோலத்தில் உடல் முழுவதும் விபூதியை பூசி காட்சி தருகிறார். அங்குள்ள வேப்பமரம் ஒன்றின் கீழே அமர்ந்திருந்த இவர், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அந்த இடத்தில் தங்கி இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். மலைக்கோவிலூர் பகுதியில் கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக இவரை காண்பதாக அப்பகுதியினர் கூறினர்.

காணிக்கைகள்
இந்த மலைக்கோவிலூர் சித்தரை காண்பதற்காக கரூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பலரும் நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போது, இவரைப் பற்றிய தகவல் கேள்விப்பட்டு பிஸ்கட் பாக்கெட், தண்ணீர் பாட்டில், தேங்காய், பழம் சாப்பாடு உள்ளிட்டவற்றை கொண்டு வந்து கொடுத்தனர். பக்தர்கள் கொண்டு வந்து கொடுக்கும் எதையும் ஏற்க மறுத்து அவற்றை அங்கேயே தூக்கி எறிந்து விடுகிறார். ஆனால் தனது பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்குகிறார். அப்பகுதி முழுவதும் பிஸ்கட் பாக்கெட், தண்ணீர் பாட்டில்கள், பழங்கள், சாப்பாடு உள்ளிட்டவை குவிந்து காணப்படுகின்றன.

திட்டமிட்டு தகவல்
பல ஆண்டுகளாக அப்பகுதியில் இருக்கும் இவர் இதுவரை யாரிடமும் பேசியது இல்லை என்று கூறப்படுகிறது. அருகிலுள்ள பொதுமக்களிடம் இவர் குறித்து கேட்டபோது, கரூரைச் சேர்ந்த இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்ததாகவும், சுப்பிரமணி என்பது அவர் பெயர் எனவும், குடும்ப பிரச்சினை காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் வந்ததாக தெரிவிக்கின்றனர். வெயில், மழை, காற்று என்று எந்த காலத்திலும் அதே இடத்தில் அவர் தங்கி இருப்பதாக தெரிவித்தனர். ஆனால், இவரை காண வரும் பக்தர்கள் மலைக்கோவிலூர் சித்தரை வணங்கி விட்டு சென்ற பிறகு தங்களது வாழ்க்கையில் நல்லது நடப்பதாகவும், நெடுஞ்சாலையில் பாதுகாப்பாக பயணம் செய்வதாகவும் தகவல்களை பரப்பினர்.

எண்ணிக்கை அதிகரிப்பு
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பாக சாக்கடை சித்தர், மூக்குப்பொடி, சித்தர் செவ்வாழை, சித்தர் உள்ளிட்ட பல்வேறு வகையான சித்தர்கள் தோன்றி பல்வேறு ஆன்மீக அருள் வாக்குகளை வழங்கி வந்த நிலையில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் தற்போது சித்தர் ஒருவர் நிர்வாணமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருவதாக சில யூட்யூப் சேனல்களும் கதை, திரைக்கதை எழுதி பரப்பு கரூர் மட்டுமின்றி அருகிலுள்ள மாவட்டங்களிலும் இவர் குறித்த தகவல்கள் பரவியது. இதனால் ஆயிரக்கணக்கில் இவரை பார்க்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

பகீர்
இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களாக சித்தர் என்றும் நெடுஞ்சாலை சித்தர் என்றும் இவரை கூறி நாகம்பள்ளியை சேர்ந்த செல்லமுத்து மற்றும் நித்தியா, ஆகியோர் தகரகொட்டகை, நாகம்பள்ளி கிராமம், அரவக்குறிச்சி தாலுகா, கரூர் மாவட்டம், என்பவரும் மற்றும் ஓரிருவர்கள் சேர்ந்து பொதுமக்களிடம் ஏமாற்றி உண்டியல் வசூல் செய்து சுய லாபம் பெற்று பணம் வசூல் செய்து வருகிறார்கள் என புகார் எழுந்தது. சித்தர் என கூறப்பட்ட சுப்பிரமணி அவ்விடத்தில் இருந்து எழுந்து ஓடிச் சென்று பழைய இடமான அரளி செடிக்குள் படுக்க முற்பட்டவரை மேற்கண்ட நபர்கள் இழுத்து வந்து மீண்டும் குடிசைக்குள் அமர வைத்து ஆசி வழங்க வைப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்
இது தொடர்பாக தோழர்களம் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில், மனநலம் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியை மீட்டு மனநல காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க மனு அளித்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமையில் மற்றும் அரவக்குறிச்சி வட்டாட்சியர் செந்தில்குமார், அரவக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் அரவக்குறிச்சி காவல் ஆய்வாளர் நாகராஜன் அவர்கள் தலைமையில் வருவாய்த்துறையினர், சுகாதாரத் துறையினர், மருத்துவ பிரிவினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர்.

விசாரணை
இதற்காக பாதுகாப்பணியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். சுப்பிரமணியை மீட்டு சென்றதால் அப்பதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்ட நபரை வைத்து மோசடி கும்பல் ஆயிரக்கணக்கில் உண்டியல் பணத்தையும், கோவில் கட்ட வேண்டும் என பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இதனையடுத்து பணம் கொடுத்தவர்கள் யார்? பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்தவர்கள் யார் என விசாரணை நடைபெற்று வருகிறது.