ஒரே ஒரு ஓட்டில் திமுகவை வீழ்த்திய பாஜக... கரூர் மாவட்ட பேரூராட்சி தேர்தல் சுவாரசியம்
கரூர்: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் பேரூராட்சியில் பாஜக வேட்பாளர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று திமுக வேட்பாளரை தோல்வியடைய செய்தார்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் 12,838 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான நகர்புற உள்ளாட்சி தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. பிப்ரவரி 19ல் தமிழகம் முழுவதும் ஓட்டுப்பதிவு நடந்தது. 60.7 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கப்பட்டது. விறுவிறுப்பாக ஓட்டுகள் எண்ணப்பட்டு வேட்பாளர்களின் வெற்றி, தோல்வி விபரங்கள் அறிவிக்கப்பட்டன. அனைத்து மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளிலும் திமுகவின் கையே ஓங்கியுள்ளது.

ஒற்றை ஓட்டில் மாற்றம்
ஒவ்வொரு முறையும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சில சுவாரசியமான விஷயங்கள் நடப்பது வழக்கம். பல பேரின் வெற்றி தோல்விகள் ஒற்றை ஓட்டுகளால் மாறுவது உண்டு. சிலர் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே ஓட்டுகள் பெற்று படுதோல்வி அடைவதும் நடக்கும். மேலும் வெற்றி பெறும் சுயேச்சைகள் அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அதிக வார்டுகளில் வெற்றி பெற்றுள்ள கட்சியினருடன் சேர்ந்து நிர்வாகத்தையும் கைப்பற்றுவார். இதுபோன்ற விஷயங்கள் தற்போதைய நகர்புற உள்ளாட்சி தேர்தலும் ஆங்காங்கே நடந்துள்ளது.

நான்கு முனை போட்டி
அதாவது கரூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சியில் பாஜக வேட்பாளர் ஒருவர் ஒரு ஓட்டில் வெற்றிபெற்றுள்ளார். அதுபற்றிய விபரம் வருமாறு: கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் பேரூராட்சியாக உள்ளது. இந்த பேரூராட்சியின் 3வது வார்டில் திமுக சார்பில் சுரேஷ், அதிமுக சார்பில் தர்மலிங்கம், பாஜக சார்பில் கோபிநாத், அமமுக சார்பில் ராமசாமி ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். நால்வரும் பம்பரமாக சுற்றி வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ஒரு ஓட்டில் வெற்றி
தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பாஜக வேட்பாளர் கோபிநாத் 174 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2வது இடத்தில் தி.மு.க. வேட்பாளர் சுரேஷ் 173 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதன்மூலம் கோபிநாத்தின் வெற்றியை ஒரே ஒரு ஓட்டு உறுதி செய்துள்ளது.
இந்த வார்டில் அமமுக வேட்பாளர் ராமசாமி 51 ஓட்டுகளும், அதிமுக வேட்பாளர் தர்மலிங்கம் வெறும் 5 ஓட்டுகளும் பெற்று படுதோல்வி அடைந்தனர். இதனால் அந்த பேரூராட்சி திமுகவின் சோகமடைந்தனர்.

பேரூராட்சி யாருக்கு
இருப்பினும் இந்த பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 11 இடங்களில் திமுக வென்றுள்ளது. மீதமுள்ள 4 வார்டுகளில் அதிமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒரு வார்டையும், சுயேச்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம் பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் பேரூராட்சி திமுக வசமானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications