கரூர் திமுக கவுன்சிலரின் ஆர்வக்கோளாறு! தெருவுக்கு உதயநிதி ஸ்டாலின் பெயர்! பின்வாங்கிய பின்னணி!
கரூர்: கரூரில் தெரு ஒன்றுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரை சூட்ட வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி கவனம் ஈர்த்திருக்கிறார் கவுன்சிலர் வசுமதி.
ஆர்வக்கோளாறில் திமுக கவுன்சிலர் வசுமதி செய்த காரியத்தை கட்சியின் தலைமை துளியும் விரும்பாததால் தெருவுக்கு உதயநிதியின் பெயர் சூட்டும் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
திருவாரூரில் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதியின் பெயரை சூட்டுவதற்கே பாஜகவும், அதிமுகவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பெரும் பிரளயம் செய்தது குறிப்பிடத்தக்கது.

கரூர் மாநகராட்சி
கரூர் மாநகராட்சி 36வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் வசுமதி. இவரது வார்டுக்குட்பட்ட பகுதியில் கரூர் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் மிகுந்த பரபரப்புடன் இயங்கி வரும் இவர், ஒரு ஆர்வக்கோளாறில் தனது வார்டுக்குட்பட்ட மணக்களம் தெருவுக்கு உதயநிதி ஸ்டாலின் பெயரை புதிதாக சூட்டுமாறு மாநகராட்சிக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்ததுடன் தீர்மானமும் நிறைவேற்றச் சொல்லியிருக்கிறார்.

தீர்மானம் நிறைவேற்றவில்லை
இது தொடர்பான தகவலை கரூர் மேயர் கவிதா கணேசன் அமைச்சர் செந்தில்பாலாஜி கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார். மேலும் இது தேவையற்ற சர்ச்சையை கிளப்புவதோடு புதிதாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதிக்கு விமர்சனங்களை பெற்றுக் கொடுக்கும் என அட்வைஸ் கிடைக்கப்பெற்றதால் தெருவுக்கு உதயநிதி பெயர் வைக்கும் தீர்மானத்தை அப்படியே கிடப்பில் போட்டிருக்கிறார். இதனிடையே கவுன்சிலர் வசுமதி செய்த காரியத்தை கட்சியின் தலைமை துளியும் விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதி பெயர்
சில மாதங்களுக்கு முன்னர் திருவாரூரில் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதியின் பெயரை சூட்டுவதற்கே பாஜகவும், அதிமுகவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பெரும் பிரளயம் செய்தது குறிப்பிடத்தக்கது. கருணாநிதி பெயர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலையே நேரடியாக திருவாரூர் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்படியிருக்கும் போது, கரூர் அவரது சொந்த ஊர் என்பதால் இதனை சர்ச்சையாக்குவார் என்பது பற்றியும் திமுக கவுன்சிலருக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

தர்ம சங்கடம்
திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளால் கட்சித் தலைமைக்கு தர்மசங்கடமான சூழல் உருவாவது தொடர் கதையாக உள்ளது. நாகர்கோவிலிலும் கருணாநிதி பெயர் சூட்டுவது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சை வெடித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications