எல்லாத்துக்கும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா தான் காரணம்! விஜய் மேல தப்பில்லையாம்.. தாடி பாலாஜி
கரூர்: ஷூட்டிங்கிற்கே கூட 7 மணி என்றால் 6.30 மணிக்கே ஸ்பாட்டில் இருப்பவர் தான் விஜய் என்றும், விஜய்க்கு இரண்டாம் கட்ட தலைவர்கள் சரியான அறிவுறுத்தல்கள் வழங்கவில்லை என்று நடிகர் தாடி பாலாஜி குற்றச்சாட்டு வைத்துள்ளார். கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தாடி பாலாஜி இவ்வாறு கூறினார்.
விஜய்யின் கரூர் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள், குழந்தைகள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதில் 108 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 104 பேர் தற்போது வீடு திரும்பியிருக்கிறார்கள்.

கரூரில் மக்களை சந்தித்த தாடி பாலாஜி
இந்த நிலையில் விஜயின் தீவிர ஆதரவாளரான தாடி பாலாஜி கரூருக்கு இன்று சென்றார். கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நேரில் ஆறுதல் கூறினார். இதற்குப் பிறகு தாடி பாலாஜி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர், விஜய்க்கு இரண்டாம் கட்ட தலைவர்கள் சரியான அறிவுறுத்தல்கள் வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு வைத்தார்.
மேலும், 7 மணிக்கு ஷூட்டிங் என்றால் அதற்கு முன்பே விஜய் போய்விடுவார்... தாமதமாக போக மாட்டார். அப்படியிருக்கும்போது, எந்த நேரத்திற்கு வர வேண்டும் என்பதை இரண்டாம் கட்ட தலைவர்களே அவருக்கு வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக தாடி பாலாஜி அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:
விஜய்க்கும் மனவேதனை தான் இருக்கும்
41 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். குழந்தைகள் நிறைய பேர் உயிரிழந்து இருக்கிறார்கள் என்பதை கேட்டவுடன் மனசே பதறுது... குழந்தைகள் என்ன பாவம் பண்ணினார்கள்? எனக்கும், உங்களுக்கும் என்ன மனவேதனை இருக்கோ... அதே மனவேதனைதான் விஜய்க்கும் இருக்கும்.
இரண்டு நாட்களாக கடுமையான மன உளைச்சலில் இருக்கிறார் என்பதை நன்றாகவே என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. கரூர் மக்கள் மீதான மதிப்பு காரணமாகவே இங்கு வந்தேன். யாருக்கும் நான் பயப்பட மாட்டேன். என் தலைவர் விஜய்க்காகத்தான் இங்கு வந்தேன். ஏனென்றால் இப்படி நடக்கும் என்று அவரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்.
ஷூட்டிங்கிற்கே லேட்டா போக மாட்டார்
விஜய்க்கு 100 சதவீதம் எல்லாமே தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. இந்த சம்பவம் கூட அவருக்கு ஏதாவது புரிதல் ஏற்படுத்தியிருக்கும். விஜயை விட இரண்டாம் கட்ட தலைவர்கள் ஏன் அஜாக்கிரதையாக இருக்கிறார்கள் என்பதுதான் எனது கேள்வி. அவர்கள் எல்லாருமே இந்த இடத்தை பார்த்திருக்கிறார்கள்.
இந்த இடத்தை ஆய்வு செய்திருக்கிறார்கள். ஆனால், இந்த டைமில் நீங்கள் வந்தால் கரெக்ட்டாக இருக்கும் என்று இரண்டாம் கட்ட தலைவர்கள்தான் அவருக்கு அறிவுறுத்த வேண்டும். ஷூட்டிங் நடக்கும் போது கூட 7 மணிக்கு கால்ஷீட் என்றால் 6.30க்கே இருப்பவர்தான் விஜய். தாமதமாக வந்ததும் ஒரு காரணம்தான்.
இரண்டாம் கட்ட தலைவர்கள்
ஆனால் அதற்கு விஜய்யை நான் குறை கூறவே மாட்டேன். இவர்கள் (இரண்டாம் கட்ட தலைவர்கள்) ஏன் சொல்லவில்லை? விஜய்க்காக வந்த கூட்டம்தான். ஆனால் விஜய் யாரை நம்பி வருகிறார்? இவர்கள் கொடுக்கும் அறிவுறுத்தலை கேட்டுதான் வருகிறார். அப்படி இருக்கும்போது, முறையான அறிவுறுத்தலை யார் கொடுக்க வேண்டும்? இரண்டாம் கட்ட தலைவர்களின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது.
இரண்டாம் கட்ட தலைவர்கள் என்றால் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடி நிர்மல் குமார் இவர்கள்தான். இவர்களுக்கு அரசியல் நன்றாக தெரியும். புதிதாக அரசியலுக்கு வரவில்லை. எல்லாமே அவர்களுக்கு தெளிவாக தெரியும். இப்போது ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார் விஜய். அதிலும் என்ன சொல்கிறார்? "என்னை எதுவேண்டுமானாலும் செய்யுங்கள்" என்கிறார். அங்கே கூட அவர்களை விட்டுக்கொடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications