அதிமுக, பாஜக ஓரமா போங்க.. “உண்மையான எதிர்க்கட்சி பாமக தான்” - ஒரே போடாக போட்ட அன்புமணி ராமதாஸ்!
கரூர் : உண்மையான எதிர்க்கட்சி வேலையை நாங்கள் மட்டுமே செய்கிறோம் என்றும் மற்ற கட்சிகளுடன் ஒப்பிட விரும்பவில்லை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
உண்மையான எதிர்க்கட்சியாக, மக்கள் சார்ந்த பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதற்கு பாமக காரணமாக திகழ்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி யார் என்பதில் அதிமுக, பாஜக இடையே கருத்து மோதல்கள் நடந்து வரும் நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம்
கரூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "ஜூன் 17ஆம் தேதி டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஒரு கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. கர்நாடகா அரசு அவர்களுக்கு அனுப்பி வைத்த மேகதாது அணை சம்பந்தமன திட்ட அறிக்கையை விவாதிக்க இக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இது சட்டத்திற்கு எதிரானது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானது. தமிழக நலனுக்கு எதிரானது.

மேகதாது அணை
இந்தக் கூட்டம் நடைபெறக்கூடாது. அப்படி நடைபெற்றாலும், மேகதாது பிரச்சனையை அதில் விவாதிக்கக்கூடாது. இது சம்பந்தமாக தமிழக அரசிடம் 5 நாட்களுக்கு முன் அறிக்கை மூலம் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். தமிழக அரசு இது சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய தீர்மானித்துள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறார். அவரை உடனடியாக மாற்றவேண்டும். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இதனை தூண்டிவிட்டு கொண்டு இருக்கின்றன.

காவிரி மணல்
காவிரி ஆற்றில் மணல் எடுக்கின்ற திட்டம் அரசுக்கு இருக்கிறது எனத் தெரிகிறது. ஒரு காலத்தில் 48 மணல் குவாரி இருந்தது. தற்போது 4 குவாரிகள் மட்டும் இருக்கின்றன. காவிரி ஆற்றில் மணல் எடுப்பது தாயை மானபங்கம் செய்வதற்கு சமம். இதற்கு மேல் நான் என்ன சொல்லமுடியும்? ஒரு பிடி மணலும் எடுக்க விடமாட்டோம். வரும் காலத்தில் இயற்கைச் சீற்றங்களைச் சந்திப்போம். வரும் காலத்தில் மழை குறைந்துவிடும் என்கின்றனர்.

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம் என்பது மிகப்பெரிய ஒரு சீர்கேடு. அடுத்த தலைமுறையை சீரழிக்கும் 3 பெரிய பிரச்சனைகள் மது, போதை பழக்கம், ஆன்லைன் சூதாட்டம். பார் நடத்துவது என்பது சட்டவிரோதமானது. எனவே பார்கள் இருக்கக்கூடாது. கரூர் மாவட்டத்தில் அதிகளவில் சந்துக்கடைகள் உள்ளன. அமைச்சருக்கும் அதற்கும் சம்பந்தம் இருக்கக்கூடாது. திமுக படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்றது. அதன்படி கடைகளை மூடவேண்டும்.

உண்மையான எதிர்க்கட்சி
பாமக 2.0 செயல்திட்டத்தின்படி 2026ல் தமிழகத்தில் பாமக ஆட்சி நடைபெறும். ஒருமித்த கருத்து கொண்டுள்ள அமைப்புகள், கட்சிளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்போம். அதற்கான வியூகங்களை 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எடுப்போம். உண்மையான எதிர்க்கட்சி வேலையை நாங்கள் மட்டுமே செய்கிறோம். உண்மையான எதிர்க்கட்சியாக, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள், மக்கள் சார்ந்த பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதற்கு பாமக காரணமாக திகழ்கிறது. மற்ற கட்சிகளுடன் ஒப்பிட நான் விரும்பவில்லை." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications