நங்கநல்லூர் யூடியூபர் கொலை! "நானும் அம்மாவும் இனி இருக்க மாட்டோம்" மகனுக்கு மெசேஜ் அனுப்பிய தந்தை
சென்னை: "நானும் அம்மாவும் இனி இருக்க மாட்டோம்" மகனுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு, மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை நங்கநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நங்கநல்லூர் தில்லை கங்கா நகரில் வசித்து வந்தவர் சுப்பிரமணி (51). இவரது மனைவி நாகலட்சுமி (41). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ரஷ்யாவிலும், இளைய மகன் சைலேஷ் (18) சென்னை மதுரவாயலில் உள்ள கல்லூரியில் மருத்துவப் படிப்பு படித்து வருகின்றனர்.

சுப்பிரமணி நீண்ட நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என தெரிகிறது. நாகலட்சுமி, நங்கநல்லூர், அண்ணா நகரில் பட்டுப்புடவை பிசினஸ் செய்து குடும்பத்தை நடத்தி வந்தாராம். இந்த நிலையில் வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் செலவிற்கு பணம் கேட்டு சுப்பிரமணி நச்சரித்து வந்ததால் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாம்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்று ஒரு சண்டையில் கோபித்துக் கொண்டு மதுரையில் உள்ள தனது அக்கா வீட்டில் சில மாதங்கள் தங்கியிருந்தாராம். அப்போது அவருடைய செலவுக்கு நாகலட்சுமிதான் பணம் அனுப்பி வந்தாராம்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை வந்த சுப்பிரமணி, மீண்டும் தனது மனைவியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று தனது மகன் சைலேஷுக்கு சுப்பிரமணி மெசேஜ் அனுப்பினாராம்.
அதில் "நானும் அம்மாவும் இனி இருக்க மாட்டோம், உனக்கு சாப்பாடு வைத்திருக்கிறேந் வந்து சாப்பிடு" என மெசேஜ் அனுப்பியிருந்தாராம். இந்த மெசேஜை பார்த்து அதிர்ச்சி அடைந்த சைலேஷ் கல்லூரியில் இருந்து பதறி அடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தாராம்.
அப்போது வீட்டின் மெயின் டோர் திறந்திருந்ததாம். சற்று தயக்கத்துடனே சைலேஷ் உள்ளே சென்ற போது அங்கு ரத்த கறை பதிந்த கால் தடம் இருந்ததை கண்டு திடுக்கிட்டார். ரத்த கறை கொண்ட கால் தடம் வந்த இடத்தை நோக்கி சென்ற போது அங்கிருந்த ஒரு அறைக்கு நாகலட்சுமி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தாராம்.
பின்னர் தனது அப்பாவை தேடி இன்னொரு அறைக்கு சென்ற போது அங்கு ஃபேனில் சுப்பிரமணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். உடனே இரு உடல்களையும் பார்த்து கதறி அழுத சைலேஷ் ஆதம்பாக்கம் போலீஸாருக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார்.
தகவலறிந்த போலீஸார் விரைந்து வந்து இரு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், நாகலட்சுமி நடத்தும் பிசினஸில் கடன் அதிகரித்துவிட்டதாம்.
இது தொடர்பாக நாகலட்சுமிக்கும் சுப்பிரமணிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். அந்த வகையில் சம்பவத்தன்று சுப்பிரமணி, "இவ்வளவு கடன் வைத்திருக்கிறாயே , யார் அடைப்பது" என கேட்டாராம். அதற்கு நாகலட்சுமி, "நீ வேலைக்கு சென்றிருந்தால் நான் ஏன் கடன் வாங்க போகிறேன்" என வாக்குவாதம் நடந்ததாம்.
அப்போது வீட்டை விட்டு வெளியே சென்ற சுப்பிரமணி, அரிவாளை வாங்கி வந்து நாகலட்சுமியை வெட்டிக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவிக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து ஆதம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.














Click it and Unblock the Notifications