கருணைக் கிழங்கு உடலுக்கு நல்லதுனு சொல்லி பச்சையாக சாப்பிட்ட இளைஞருக்கு கொடூரம்! முகம் வீங்கி பலி
கிருஷ்ணகிரி: உடலுக்கு நன்மையை தரும் என நினைத்து காட்டு கருணைக் கிழங்கை வேக வைக்காமல் பச்சையாக சாப்பிட்ட இளைஞர் சிறிது நேரத்தில் முகமும் உடலும் வீங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே கருணைக் கிழங்கை தொட்டால் கைகளிலும் அதை சாப்பிட்டால் நாக்கிலும் ஒரு விதமான அரிப்பு ஏற்படும் என சொல்வதுண்டு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த தார்வழி பகுதியில் வசித்து வந்தனர்.

இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர் விவசாய பணிகளுக்கு டிராக்டர் ஓட்டும் பணியை செய்து வந்தார். அவ்வப்போது கிடைக்கும் பணிகளையும் செய்து வருமானம் ஈட்டி வந்தார். இந்த நிலையில் மாச்சம்பட்டு பகுதியில் ரவி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் மணிகண்டன் தேங்காய் ஏற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு விளைந்திருந்த காட்டு கருணைக் கிழங்கை மணிகண்டன் பார்த்ததும் அதை சாப்பிட விரும்பினார். ஆனால் உடனிருந்தவர்கள், கருணைக் கிழங்கை எப்போதும் சமைத்துத்தான் சாப்பிட வேண்டும். பச்சையாக சாப்பிட வேண்டாம் என தடுத்தனர். ஆனாலும் அவர்கள் பேச்சை மணிகண்டன் கேட்கவில்லை.
இந்த கிழங்கை பச்சையாக சாப்பிட்டால்தான் கூடுதல் பலம் கிடைக்கும் என கூறி அந்த கிழங்கை சாப்பிட்டுள்ளார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மணிகண்டனுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு அவருடைய முகம், உடலில் உள்ள சில பாகங்களில் வீக்கம் ஏற்படத் தொடங்கியது.
வீங்கிய இடங்களில் எல்லாம் வலியும் அரிப்பும் இருந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு எந்த வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இறந்துவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொதுவாக கருணைக் கிழங்கு அரிப்பை தரும் ஒரு பொருளாகும். அதிலும் வாங்கியதும் உடனே அந்த காயை நறுக்கினால் கைகளில் அரிப்பு ஏற்படும்.
அதை சமைத்து சாப்பிட்டால் நாக்கில் நமநம என இருக்கும். எனவேதான் கருணைக் கிழங்கை பறித்து வந்ததும் சில நாட்கள் அதன் மேல் பகுதி காய்ந்ததும் அது பழைய காய் ஆனதும் அதை வெட்டி சமைக்கலாம். எனினும் இந்த காயில் புளி சேர்த்து சமைத்தால்தான் அரிப்பு, நமைச்சல் இருக்காது என்கிறார்கள். இந்த காய் நறுக்கியவுடன் அந்த பகுதி நம் தோல் மீது பட்டதுமே அரிப்பு ஏற்பட்டு வீங்கத் தொடங்கும்.
இந்த கருணைக் கிழங்கை சமைத்து சாப்பிட்டால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுக்கும். உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்றும். உடல் எடை குறைக்கவும் பயன்படுகிறது. மாதவிடாய் காலத்து வலியை நீக்கும். அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும். ஆஸ்துமா நோய் இருப்பவர்கள் இந்த கிழங்கை தவிர்க்க வேண்டும். அது போல் ஒவ்வாமை எனப்படும் அலர்ஜி இருப்போரும் இந்த கிழங்கை சாப்பிடாமல் இருப்பது நல்லது.












Click it and Unblock the Notifications