அதிர்ஷ்டம்னா இதுதான்.. ஒரே மாதத்தில் 2 முறை அடித்த யோகம்! லாட்டரியில் பண மழை.. துள்ளி குதித்த நபர்
லண்டன்: அதிர்ஷ்டம்னா இதுதாங்க என்று சொல்லும் வகையில், லாட்டரியில் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை பரிசு வென்று இருக்கிறார் பிரிட்டனை சேர்ந்த எலக்ட்ரிஷியன் ஒருவர். தற்போது சந்தோஷத்தில் துள்ளி குதித்து கொண்டு இருக்கும் நபர், பக்கத்து வீட்டினரையும் பண மழையில் குளிக்க வைத்துவிட்டாராம்.
கொடுக்குற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்று சொல்வார்கள்.. லக்கி மேன் படத்தில் கார்த்திக்கிற்கு அதிர்ஷ்டம் அடிப்பது போல மூன்று வாரத்தில் இரண்டு முறை பல லட்சங்களை பரிசாக அடித்து இருக்கிறார் ஒரு அதிர்ஷ்டசாலி... நரி முகத்தில்தான் விழித்து இருக்கிறார் போல..

அவரது நண்பர்களே பொறாமைப்படும் அளவுக்கு சில நாட்களில் சொந்த வீடு என சகல வசதிகளையும் செய்து லைஃப்பில் மொத்தமாக செட்டில் ஆகியிருக்கிறார்... இதெல்லாம் எப்படி என நினைக்கிறீங்களா. லாட்டரியில் 3 வாரத்தில் 2 முறை அதிர்ஷ்டம் அவருக்கு அடித்து உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
பிரிட்டனின் லான்சைர் பகுதியை சேர்ந்தவர் நீல். இவரது மனைவி ஹாய்லே.. எலக்ட்ரிஷியனாக வேலை செய்து வரும் இவருக்கு லாட்டரி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. இதனால், கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக போஸ்ட்கோட் லாட்டரி- யை வாங்கியிருக்கிறார். முதல் மாதத்திலேயே அவருக்கு 30 ஆயிரம் பவுண்டு பரிசு அடித்துள்ளது. நம்ம ஊர் மதிப்பில் சொல்வது என்றால் சுமார் 33 லட்சம் பரிசு அடித்துள்ளது.
இதனால் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளார். ஆசை யாரை தான் விட்டது என்பது போல மீண்டும் லாட்டரியை வாங்கியிருக்கிறார். மூன்று வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு லாட்டரியை வாங்கினார். யார் முகத்தில் முழித்தாரோ தெரியவில்லை.. அந்த லாட்டரிக்கும் பரிசு அடித்தது. முதலில் கிடைத்த பரிசை விட இரண்டாவது குறைவாகவே கிடைத்துள்ளது. ஆனாலும் ஒரே மாதத்தில் இரண்டு முறை என்றால் சும்மாவா...
அதிர்ஷ்ட தேவதை மொத்தமாக நம்ம பக்கம் திரும்பிவிட்டார் போல என்று நினைத்துக்கொண்ட அவர், தற்போது சொந்தமாக வீடு, சொத்து என வாங்கி செட்டில் ஆகிவிட்டார். தாங்கள் லாட்டரியில் இணைந்து பரிசு வென்றது போல, பக்கத்து வீட்டில் இருப்பவர்களும் வெற்றி பெறட்டுமே என நினைத்த நீல், அவர்களை இந்த லாட்டரி கேமிங்கில் பங்கேற்க வைத்து இருக்கிறார்.
இதனால், மொத்தமாக பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவரும் சேர்ந்து ரூ.5.97 கோடி ரூபாய் பரிசு வென்று இருக்கிறார்கள்.. இதனால், நீல் மட்டுமின்றி அவரது பக்கத்து வீட்டினரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டு இருக்கிறார்களாம்.. இது குறித்து நீல் தம்பதியின் நண்பர்கள் கூறும் போது, "நண்பர்களுடன் லாட்டரியில் பரிசு வெல்வது என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கும். லாட்டரியில் அடித்த பரிசை வைத்து சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டு இருக்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications