ஆட்சியை இழக்கும் அபாயம்! நொறுங்கி போன ரிஷி சுனக்.. பேரிடியாக வந்த செய்தி! என்ன செய்ய போகிறார்
லண்டன்: பிரிட்டன் பிரதமராக இருக்கும் ரிஷி சுனக்கிற்கு பேரிடியாக ஒரு செய்தி இப்போது வந்துள்ளது. இந்த மோசமான நிலைமையால் அவர் தனது ஆட்சியையே இழக்கக் கூடும் என்றும் சொல்லப்படுகிறது.
பிரிட்டன் நாட்டில் இந்தாண்டு முழுக்க பல்வேறு அரசியல் குழப்பங்கள் இருந்தது. இந்தாண்டில் மட்டும் மொத்தம் 3 பிரிட்டன் பிரதமர்கள் மாறியுள்ளனர். முதலில் போரிஸ் ஜான்சன் அங்கே பிரதமராக இருந்தார்.

இருப்பினும், அங்கே அவர் தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார். குறிப்பாக கொரோனா காலத்தில் பிரிட்டன் அரசு குடும்பம் தொடங்கி அனைவரும் வீடுகளில் முடங்கியிருந்த நிலையில், இவர் மட்டும் தனது ஊழியர்களுக்கு பார்ட்டி கொடுத்தார்.
பிரிட்டன் நிலைமை: இது தான் மிகப் பெரியளவில் சர்ச்சையைக் கிளப்பியது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை அமைப்பும் அவர் மீது தான் தவறு உள்ளதாகத் தெரிவித்துவிட்டது. இது அங்கே மிகப் பெரியளவில் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து வேறு வழியில்லாமல் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. அவருக்கு அடுத்தாக லிஸ் டிரஸ் என்பவர் புதிய பிரதமரானார்.
அங்கே பொருளாதாரம் ஏற்கனவே சிக்கலாக இருந்த நிலையில், லிஸ் டிரஸ் எடுத்த சில நடவடிக்கை நிலைமை மேலும் மோசமாக்கியது. இதனால் அவரும் பதவி விலக நேர்ந்தது. இந்தச் சூழலில் தான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் என்பவர் பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்றார். நாட்டின் மிகவும் இளம் வயது பிரதமர், முதல் இந்து பிரதமர் என்று ரிஷி சுனக் பல்வேறு பெருமைகளை வைத்திருந்தார். அவர் பிரிட்டன் பொருளாதாரத்தை மீட்க இப்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
ஷாக் முடிவுகள்: இருப்பினும், நிலைமை கையை மீறிச் சென்றுவிட்டதைப் போலவே தெரிகிறது. மக்கள் இப்போது ஆளும் கன்சர்வேடிவ் கட்சி மீது கடுமையான கொந்தளிப்பில் உள்ளனர். ஊழல் மற்றும் உச்சத்தில் இருக்கும் பணவீக்கம் ஆகியவை பிரிட்டன் நாட்டை மிக மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது. இதனால் அங்குள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மொத்த கோபமும் இப்போது பிரிட்டன் அரசு மீது திரும்பியுள்ளது.
இது அங்கே சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது. அங்கே நேற்றைய தினம் மொத்தம் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் மூன்று தொகுதிகளிலும் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி பயங்கரமான அடியை வாங்கியது. மூன்று தொகுதிகளும் ரிஷி சுனக் கட்சியின் கையை விட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதன் மூலம் பிரிட்டன் வரலாற்றில் இடைத்தேர்தலில் ஒரு நாளில் 3 தொகுதிகளை இழந்த பிரதமர் என்ற மோசமான சாதனையை ரிஷி சுனக் படைப்பார் என்று சூழல் உருவானது.
படுதோல்வி: இருப்பினும் கடைசி சுற்றில் மேற்கு லண்டனில் உள்ள உக்ஸ்பிரிட்ஜ் தொகுதியில் மட்டும் எப்படியோ போராடி கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 தொகுதிகளை இழந்த பிரதமர் என்ற மோசமான சாதனையை ரிஷி சுனக் நூலிழையில் தவிர்த்தார். இந்த உக்ஸ்பிரிட்ஜ் தொகுதியில் கன்சர்வேடிவ் கட்சிக்குத் தான் மிகப் பெரிய செல்வாக்கு உள்ளது.
இங்கிருந்து தான் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் எம்பி ஆகியிருந்தார். அந்தளவுக்கு கன்சர்வேடிவ் கட்சி செல்வாக்காக இருக்கும் இடமாகும். ஆனால், இந்த தொகுதியில் கூட வெறும் 500 வாக்கு வித்தியாசத்தில் தான் ரிஷி சுனக் கட்சியால் வெல்ல முடிந்தது.
பேரிடி: மற்ற இரண்டு இடங்களையும் இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் தொழிலாளர் கட்சி கைப்பற்றியது. அங்கே நடக்கும் கருத்துக்கணிப்புகளிலும் கூட தொழிலாளர் கட்சிக்கே மிகப் பெரிய லீட் இருக்கிறது. தற்போது வந்த புதிய சர்வே-இல் உழைப்பாளர் கட்சிக்கு சுமார் 46% மக்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். அதேநேரம் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சிக்கு வெறும் 26% மட்டுமே கிடைத்துள்ளது.
இந்த இடைத் தேர்தல் முடிவுகள் ரிஷி சுனக்கிற்கு பேரிடியாக அமைந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த பொதுத் தேர்தலில் ரிஷி சுனக் கட்சி படுதோல்வி அடைவது நிச்சயம் என்றே கூறுகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் 1.5 ஆண்டுகள் இருந்தாலும் கூட இதை நிலை நீட்டிக்கவே வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications