லிஸ் ட்ரஸ் ராஜினாமா.. பிரிட்டனின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக்? வெளியான கருத்து கணிப்பு முடிவு
லண்டன்: பிரிட்டன் பிரதமர் பதவியை லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்துள்ள நிலையில் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இந்நிலையில் தான் பிரிட்டன் அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் எடுத்த கருத்து கணிப்பில் லிஸ் ட்ரசுக்கு மாற்றாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கை பிரதமராக நியமிக்க 55 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
பிரிட்டன் பிரதமராக இருந்தவர் போரிஸ் ஜான்சன். இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். சமீபத்தில் கூட இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்து சென்றார்.
இதற்கிடையே தான் கொரோனா விதிகளை மீறியது, ஊழல், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் போரிஸ் ஜான்சன் மீது எழுந்தது. இதையடுத்து அவரது அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் ராஜினாமா செய்ய துவங்கினர்.

பிரதமரான லிஸ் ட்ரஸ்
இதையடுத்து வேறு வழியின்றி போரிஸ் ஜான்சனும் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரிட்டன் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. பல கட்டங்களாக தேர்தல்கள் நடந்தன. செப்டம்பர் 5ல் இறுதிக்கட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தோல்வியடைந்தார். முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்று பிரதமரானார்.

45 நாளில் ராஜினாமா
பிரிட்டனின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் லிஸ் ட்ரஸ் பிரதமரானார். இதையடுத்து கடந்த மாதம் 23ல் பிரிட்டன் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் மினி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பெரு நிறுவனங்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டன. இது நாட்டின் பொருளாதாரத்தை மந்த நிலைக்கு கொண்டு சென்றது. நாட்டின் கடன் விகிதங்கள் அதிகரித்த நிலையில் பிரிட்டன் பவுண்ட்டின் விலை வீழ்ச்சி கண்டது. இதையடுத்து வரி குறைப்பு நடவடிக்கையை திரும்ப பெற்ற லிஸ் ட்ரஸ் இன்று ராஜினாமா செய்தார். வெறும் 45 நாட்கள் மட்டுமே அவர் பிரிட்டன் பிரதமராக இருந்தார்.

சமாளிக்க முடியாததால்..
பிரிட்டன் பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ் உடனடியாக தனது ராஜினாமாவை செய்யவில்லை. மினி பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு பிரிட்டனில் பணவீக்கம் அதிகரித்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர தொடங்கின. இதையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சிக்குள்ளே லிஸ் ட்ரஸ் மீது அதிருப்தி அணி உருவாகியது. இதனை சமாளிக்க நிதி அமைச்சராக இருந்த குவாசி குவார்டெங்கை பிரதமர் லிஸ் டிரஸ் நீக்கினார். இவருக்கு மாற்றாக முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெர்மி ஹன்டை புதிய நிதியமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். கடந்த ஒரு வாரமாக அதிருப்தியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் தான் லிஸ் ட்ரஸ் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

போராளி எனக்கூறி சரண்டர்
முன்னதாக நேற்று அவர் தான் ஒரு போராளி என கூறியிருந்தார். இதனால் ராஜினாமா முடிவை கையில் எடுக்கமாட்டார் என்ற கருத்துகள் வந்த நிலையில் இன்று ராஜினாமா செய்துள்ளார். ஒரு வேளை அவர் ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால் வரும் நாட்களில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்திருக்க வாய்ப்பு இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் அதற்கு வழி விடாமல் லிஸ் ட்ரஸ் தானாகவே சரண்டராகி பொருளாதார கொள்கை சார்ந்த தவறை உணர்ந்து ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ரிஷி சுனக்கிற்கு வாய்ப்பு?
இதற்கிடையே தான் லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்வதற்கு முன்பு You Gov எனும் அமைப்பு கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. அப்போது தற்போதைய(பொருளாதார மந்த நிலை) நிலையில் பிரதமராக யாருக்கு ஆதரவு தெரிவிப்பீர்கள் என கன்சர்வேட்டிவ் கட்சியினரிடம் கேட்டனர். இந்த கேள்வியானது லிஸ் ட்ரஸ் மற்றும் ரிஷி சுனக் ஆகியோரை அடிப்படையாக கொண்டு கேட்கப்பட்டது. இதில் கருத்து தெரிவித்தவர்களில் 55 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு ஆதரவு தெரிவித்தனர். இருப்பினும் 38 சதவீதம் பேர் மட்டும் லிஸ் ட்ரசுக்கு ஆதரவாக இருந்தனர். இதனால் பிரிட்டனின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ரிஷி சுனக்கிற்கு உள்ளதாக அந்த கருத்து கணிப்பு தெரிவித்தது.

மீண்டும் போரிஸ் ஜான்சனா?
மேலும், பிரிட்டனில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் அடுத்த பிரதமராக யாரை நியமிக்கலாம் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதில் 32 சதவீதம் பேர் ஊழல், முறைகேடு புகாரால் பதவியை இழந்த போரிஸ் ஜான்சனின் பெயரை கூறினர். இவருக்கு அடுத்தப்படியாக ரிஷி சுனக்கின் பெயரை 23 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 3வது இடத்தில் 10 சதவீதத்தினரின் ஆதரவுடன் பென் வாலசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அடுத்த பிரதமர் யார்?
இருப்பினும் பிரதமர் பதவியை லிஸ் ட்ரஸ் தற்போது ராஜினாமா செய்துள்ள நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் பிரதமர் தேர்தல் நடைபெறும் என கூறப்படுகிறது. இதனால் கருத்து கணிப்புகள் எதுவாக இருந்தாலும் தேர்தலில் போட்டியிடும் நபர்களை பொறுத்து ஓட்டு போடுபவர்களின் மனநிலை மாறும் என்பதால் பிரிட்டனின் அடுத்த பிரதமராக யார் முடிசூடுவார்? என்பதை அறிய நாம் காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.












Click it and Unblock the Notifications