சம்பளம்தான் காரணம்! 800 பிரிட்டன் தொழிலாளர்களின் பணியை இந்தியர்களுக்கு வழங்கும் கப்பல் நிறுவனம்
லண்டன்: பிரிட்டனை சேர்ந்த 185 ஆண்டுகள் பழமையான கப்பல் நிறுவனம் அந்நாட்டை சேர்ந்த 800 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டு இந்தியர்களை குறைந்த ஊதியத்தில் பணியமர்த்தி இருக்கிறது.
உலகின் முன்னணி கப்பல் நிறுவனமான பி அண்ட் ஓ (P&O) 185 ஆண்டு பழமைவாய்ந்தது. இந்த நிறுவனத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மார்ச் 17 ஆம் தேதி, சில கப்பல் சேவைகளை நிறுத்தி வைத்த பி அண்ட் ஓ நிறுவனம் பிரிட்டனை சேர்ந்த 800 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்தது.

கப்பல் நிறுவனத்துக்கு எதிர்ப்பு
பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ள பிரிட்டன் ஊழியர்கள் 800 பேருக்கு மாற்றாக குறைந்த ஊதியத்தில் இந்தியாவை சேர்ந்த 800 ஊழியர்களை பணியமர்த்தப்படுகின்றனர். கப்பல் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு பிரிட்டன் ரயில், கப்பல், போக்குவரத்து தொழிலாளர்கள் யூனியன் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

குறைந்த ஊதியம் வழங்கும் நிறுவனம்
லிவர்பூல் - டப்ளின் வழித்தடத்தில் இயக்கப்படும் பி அண்ட் ஓ கப்பல்களில் பணிபுரியும் பிலிப்பைனை சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு 3.47 அமெரிக்க டாலர்களை மட்டுமே ஊதியமாக வழங்கப்படுவதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டி இருக்கிறது.

இந்தியர்களை பணியமர்த்த திட்டம்
இதுகுறித்து தொழிலாளர் யூனியன் பொதுச் செயலாளர் மைக் லிஞ்ச் தெரிவிக்கையில், "நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் உள்ள ஊழியர்களை நீக்கிவிட்டு குறைவான ஊதியம் பெறும் ஊழியர்களை சேர்க்க முடிவு செய்து இருக்கின்றனர். டோவெரில் பி அண்ட் ஓ நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களை நீக்கிவிட்டு ஒரு மணி நேரத்துக்கு வெறும் 2.38 அமெரிக்க டாலர் ஊதியத்திற்கு இந்தியர்களை வேலைக்கு சேர்த்து உள்ளனர்.

உழைப்புச் சுரண்டல்
பி அண்ட் ஓ நிறுவனத்தின் இந்த நடவடிக்கை தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் செயலாகும். பிரிட்டனை சேர்ந்த தொழிலாளர்களை ஊதியத்திற்காக பணி நீக்கம் செய்திருப்பது அவர்களுக்கு இழைக்கும் துரோகம். இதுபோன்ற கப்பல்கள் அவமானத்தின் சின்னம். பி அண்ட் ஓ நிறுவன கப்பல்களை கடல் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது. பிரிட்டன் அரசாங்கம் காலதாமதம் செய்யாமல் இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.

இந்திய கப்பல்களில் எவ்வளவு ஊதியம்?
இந்தியாவில் இயக்கப்படும் கப்பல்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஆண்டு ஊதியம் மூன்று லட்சமாக உள்ளது. 8 மணி நேர பணி, வாரம் ஒருநாள் விடுமுறையை கணக்கிட்டால் ஒரு மணி நேரத்துக்கு 2 டாலர் என வருகிறது. இது தற்போது பி அண்ட் ஓ நிறுவனம் இந்தியர்களுக்கு நிர்ணயித்து இருக்கும் 2.38 அமெரிக்க டாலர்கள் என்ற ஊதியத்தை விட மிகக்குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications