இறுதி போட்டிக்கு முன்னேறிய ரிஷி சுனக்.. இங்கிலாந்து பிரதமராகிறாரா? சூடு பிடிக்கும் ரேஸ்!
லண்டன்: கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரிட்டனின் பிரதமருக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகியோர் இறுதி வேட்பாளர்களாக தேர்வாகியுள்ளனர். சக போட்டியாளரான பென்னி மோர்டான்ட் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இந்த தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
பிரிட்டனை ஆட்டிப்படைத்து வரும் பொருளாதார நெருக்கடி, வேலையின்மை காரணமாக அந்நாட்டு அரசியலில் உச்சக்கட்ட குழப்பம் நீடித்து வருகிறது. பிரதமருக்கு எதிராக சொந்த கட்சியின் எம்.பிக்கள் 58 பேர் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பதவி விலகினர்.

5ம் கட்ட தேர்தல்
இதனையடுத்து பிரதமர் பொறுப்பிலிருந்து தான் விலகுவதாக போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். இதன் காரணமாக அடுத்த பிரதமருக்கான போட்டி தீவிரமாக நிலவி வருகிறது. இதில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்குக்கு போட்டியாக லிஸ் ட்ரஸ், கெமி படேனோச், டாம் துகென்டாட் என 10 பேர் இருந்தனர். இதனையடுத்து நேற்று நடைபெற்ற ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவில் சுனக் 137 வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்தார், அதே நேரத்தில் டிரஸ் 113 வாக்குகளைப் பெற்றார். வர்த்தக அமைச்சர் பென்னி மோர்டான்ட் 105 வாக்குகள் பெற்று போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இறுதி கட்ட வாக்குப்பதிவு
இறுதி கட்டத்திற்கு தேர்வாகியுள்ள சுனக், லிஸ் இருவருக்கும் தேர்தல் நடைபெறும். கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்கள் சுமார் 1,80,000 பேர் இதில் வாக்களிக்கின்றனர். இதில் வெற்றிப்பெறுபவர்களே கட்சியின் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வெற்றியாளர் பிரதமராகவும் பொறுப்பேற்றுக்கொள்வார். ஆனால் இந்த ஐந்துக்கட்ட வாக்குப்பதிவில் சுனக் முன்னிலையில் இருந்தாலும், இறுதிக்கட்ட தேர்தலில் சுனக் 35-53 வாக்கு சதவிகிதத்தில் வீழ்த்தப்படுவார் என YouGov கருத்துக்கணிப்பு தகவல் தெரிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் சுனக் ஒரு சோசலிசவாதி என டிரஸ் குற்றம் சாட்டியுள்ளார். அதேபோல் டிரஸ் ஒரு பழமைவாதி என்றும் சுனக் குற்றம்சாட்டியுள்ளார்.

பிரச்சாரம்
தற்போது நாடு முழுவதும் நிலவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்கள் மீள வரிச்சலுகையை அமல்படுத்துவது மட்டுமே தீர்வாகும் என பல பொருளாதார ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.ரிஷியை பொறுத்தவரையில் கடந்த காலத்தில் நிதியமைச்சராக பணியாற்றிய அனுபவம் உண்டு. இதனால் அந்நாட்டில் பரவலாக அறியப்பட்டுள்ளார். ஆனால் இது மட்டுமே முழு வெற்றிக்கு பங்களிக்காது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தற்போது நடைபெறுவது பிரதமருக்கான தேர்தல் மட்டுமல்ல அது கன்சர்வேட்டிவ் கட்சி தலைமைக்கான தேர்தல் என்பதால் கடந்த கால நிகழ்வுகளை அரசியல் விமர்சகர்கள் நினைவுபடுத்தியுள்ளனர்.

ரிஷி சுனக்
பிரிட்டனின் முந்தைய பிரதமர்களான அலெக் டக்ளஸ்-ஹோம், மார்கரெட் தாட்சர், ஜான் மேஜர், டேவிட் கேமரூன் மற்றும் தெரசா மே ஆகியோர் கட்சியின் சார்பில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படவில்லை. ஆனால் அவர்கள் பிரதமராக வெற்றிபெற்றார்கள். அதேபோல ஜான் மேஜர், தெரசா மே மற்றும் அலெக் டக்ளஸ்-ஹோம் ஆகியோருக்கு பொதுமக்கள் நேரடியாக வாக்களிக்கவில்லை. ஆனால் கட்சியின் தலைமைக்கான அதிகார போட்டியில் அவர்கள் வெற்றி பெற்று பிரதமராக செயல்பட்டனர்.

வரலாறு
1964ல் கட்சிக்கான தலைமைக்கான போட்டி நடைபெற்றது. இப்போது இருப்பதை போன்று ஜனநாயகப்பூர்வமான நடைமுறைகள் அக்காலகட்டங்களில் இல்லை. கட்சியின் உறுப்பினர்கள் 'மேஜிக் சர்க்கிள்' எனப்படும் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள். இப்படிதான் அலெக் டக்ளஸ்-ஹோம் ஓர் ஆண்டு (1963-64) பிரதமராக பணியாற்றினார். பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சியின் வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார். இதன் பின்னர்தான் கட்சியிலிருந்து தேர்தலில் போட்டியிடுவதற்கென பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

உட்கட்சி தேர்தல்
சொல்லப்போனால் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உட்கட்சி தேர்தல் அவசியம் என்கிற நடைமுறையை கன்சர்வேட்டிவ் கட்சி 1964-65 காலகட்டங்களில்தான் அமல்படுத்தியது. பிரிட்டன் வரலாற்றில் சிறப்பான ஆட்சியை கொடுத்ததாக அறியப்படுகிற மார்கரெட் தாட்சர் கூட இது போன்று கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் நடைபெற்ற 1979ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றே ஆட்சியமைத்தார்.

சிக்கல்கள்
ஆகவே பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்பதில் இவ்வளவு சிக்கல்கள் உள்ளன. கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டு பிரதமராக பணியாற்றி பின்னர் பொதுத் தேர்தலில் தோல்வியை சந்தித்த வரலாறும், இரண்டிலும் வெற்றிக் கண்ட வரலாறும் இந்த கட்சிக்கு உண்டு. இதைத்தான் அரசியல் விமர்சகர்கள் இப்போது நினைவுபடுத்துகின்றனர். எப்படியானாலும் ரிஷி சுனக் வெற்றிப் பெற வேண்டும் என்பதே இந்தியர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications