உத்தர பிரதேசத்தை உலுக்கிய விபத்து: பலியான 27 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் டிராக்டர் குளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் குழந்தைகள் என 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனனர். அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள பிரதமர் மோடி அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உன்னோ நகரில் பிரசித்தி பெற்ற சந்திரிகா தேவி கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான மக்கள் குடுமத்தினருடன் வந்து வழிபட்டு செல்வது வழக்கம்.
அந்த வகையில் இன்று 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் அந்த கோவிலுக்கு வழிபடுபடுவதற்காக புறப்பட்டனர்.

டிராக்டர் கவிழ்ந்தது
பெண்கள் குழந்தைகள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் டிராக்டரின் பின் தொட்டியில்(டிராலி) இருந்தபடி சென்றுகொண்டிருந்தனர். கான்பூர் மாவட்டத்தில் உள்ள கதம்பூர் பகுதியில் டிராக்டர் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையில் டிராக்டர் தாறுமாறாக ஓடியது. முழுவதுமாக கட்டுப்ப்பாட்டை இழந்ததால் சாலையோரம் உள்ள குளத்தில் டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்தது.

27 பேர் பலி
டிராக்டர் தொட்டி அப்படியே தலை கீழாக கவிழ்ந்ததால் அதில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயமடைந்தனர். இதில் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் அபயக்குரல் எழுப்பினர். எனினும் இந்த பயங்கர விபத்தில் டிராக்டரில் வந்த பெண்கள் குழந்தைகள் என 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.

பிரதமர் மோடி இரங்கல்
விபத்து குறித்து அறிந்த பிரதமர் நரேந்திர மோடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், உத்தர பிரதேசத்தில் நடந்த விபத்து செய்தி அறிந்து கடும் வேதனையடைந்தேன்.. விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். என்று பதிவிட்டுள்ளார். மேலும் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி இரங்கல்
இதேபோல் ஜனாதிபதி திரவுபதி முர்மு விபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ் நாத் சிங் மற்றும் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் டிராக்டர் விபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications