நடுரோட்டில் பாஜக நிர்வாகி கார்! ஆம்புலன்ஸில் துடிதுடித்து உயிரிழந்த நோயாளி! நெஞ்சை உலுக்கும் சம்பவம்
லக்னோ: ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு அனைவருமே வழிவிட்டு நிற்பார்கள். ஆனால், உபி-இல் பாஜக நிர்வாகி ஒருவரின் அலட்சியத்தால் பரிதாபமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆம்புலன்சுக்கு வழிவிட வேண்டும் என்பது அடிப்படையான ஒன்று. ஏனென்றால், பெரும்பாலும் அவசர நிலையில் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் தான் ஆம்புலன்ஸில் வருவார்கள்.
முன்பை காட்டிலும் இப்போது பலரும் ஆம்புலன்ஸை கண்டாலே வழிவிட்டு ஒதுங்கும் பழக்கம் அதிகரித்தே வருகிறது. இதன் மூலம் விலைமதிப்பற்ற பல உயிர்களும் கூட காப்பாற்றப்படுகிறது.

ஆம்புலன்ஸ்
எனவே, பொது இடங்களில் எப்போது ஆம்புலன்ஸை பார்த்தாலும் வழிவிட வேண்டும் என்பதே அறிவுறுத்தலாக இருக்கிறது. பெரும்பாலானோர் இந்த விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுகிறார்கள். ஆனால், வெகு சிலர் ஆம்புலன்சுக்கு கூட வழிவிடாமல் மோசமாகவும் நடந்து கொள்கிறார்கள். அப்படியொரு சம்பவம் தான் இப்போது உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

பாஜக நிர்வாகி
அங்கே உள்ள உள்ளூர் பாஜக நிர்வாகி ஒருவர் சாலைக்கு நடுவே தனது வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்றுவிட்டார். நடுவழியில் கார் இருந்ததால் அந்த வழியாக வந்த ஆம்புலன்சால் அதை தாண்டி செல்ல முடியவில்லை. ஹார்ன் தொடங்கிப் பல முயற்சிகளுக்குப் பின்னரும் காரை எடுக்க யாருமே வரவில்லை. இதனால், ஆம்புலன்சால் உரிய நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல முடியவில்லை. இந்த மோசமான சம்பவம் காரணமாக ஆம்புலன்ஸில் இருந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பரபரப்பு
அந்த கார் உள்ளூர் பாஜக தலைவரான உமேஷ் மிஸ்ரா என்பவருக்குச் சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது. உயிரிழந்த அந்த நோயாளியின் குடும்பத்தினர் இது குறித்து உமேஷ் மிஸ்ராவிடம் கேட்டுள்ளனர். ஆனால், தான் செய்த தவறை துளியும் உணராத உமேஷ் மிஸ்ரா, இந்த விஷயத்தை வெளியே சொன்னால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதாக உயிரிழந்த நோயாளியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

என்ன நடந்தது
சுரேஷ் சந்திரா என்பவருக்குக் கடந்த சனிக்கிழமை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அவர் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக லக்னோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை லக்னோ மருத்துவமனை கூட்டிச் சென்றனர். அப்போது உமேஷ் மிஸ்ரா தனது காரை சாலையில் நிறுத்திவிட்டு எங்கோ சென்றுவிட்டார்.

30 நிமிஷம்
ஆம்புலன்ஸ் உள்ளே நோயாளி நெஞ்சு வலியால் போராடிக் கொண்டிருந்த போதும், ரோட்டில் கார் இருப்பதால் ஆம்புலன்ஸ் ஓட்டுநரால் எதுவும் செய்ய முடியவில்லை. இதனால் 30 நிமிடங்களுக்கு மேலாக ஆம்புலன்ஸ் அங்கேயே சிக்கிக் கொண்டது. உள்ளே நெஞ்சு வலியால் துடித்த சுரேஷ் சந்திரா பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர், உமேஷ் மிஸ்ரா திரும்பிய போது, இது குறித்துக் கேட்டுள்ளனர். அவர்களிடம் மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக உமேஷ் மிஸ்ரா அவர்களிடமும் ஆவேசமாகக் கத்தியுள்ளார்.

பொய் கேஸ்
அந்த நபர் அப்பகுதியைச் சேர்ந்த பாஜக தலைவர் ராம்கிங்கர் பாண்டேவின் சகோதரர் என்று சொல்லிக் கொள்கிறார். இணையத்தில் வேகமாகப் பரவும் அந்த வீடியோவில், உமேஷ் மிஸ்ரா உயிரிழந்த நபரின் மைத்துனரைக் கடுமையாகவும் ஆபாசமாகவும் திட்டுகிறார். மேலும், தான் நினைத்தால் போலி வழக்குகளைப் போட்டு ஆளையே க்ளோஸ் செய்துவிட முடியும் என்றும் மிரட்டுகிறார். மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் போலீசார் தான் சொல்வதைத் தான் கேட்பார்கள் என்றும் மிரட்டுகிறார். இவை அத்தனையும் அந்த வீடியோவில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

கடும் விமர்சனம்
இந்தச் சம்பவம் நடக்கும் போது அங்கு போலீசார் சிலர் இருப்பதும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. ஆனால் அவர்களும் எதையும் கூறாமல் அமைதியாகவே இருக்கிறார்கள். கொஞ்ச நேரம் அவர்களைப் பார்த்துக் கத்திய உமேஷ் மிஸ்ரா, பின்னர் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. பாஜக நிர்வாகியின் செயலை கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள், போலீசாரின் செயலற்ற தன்மையையும் சாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications