பாஜகவுக்கு ஓட்டு..வெற்றியை கொண்டாடிய இஸ்லாமிய இளைஞர் அடித்துக் கொலை என குற்றச்சாட்டு.. யோகி இரங்கல்
லக்னோ : உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலின் போது பாஜகவுக்கு வாக்களித்ததோடு , பாஜக வெற்றியை இனிப்பு வழங்கி கொண்டாடிய இஸ்லாமிய இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது மறைவுக்கு உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்
உத்திரப்பிரதேச மாநில சட்டசபைக்கான பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், 2022ம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் உத்தரப் பிரதேசத்தில் நடந்து முடிந்து மார்ச் 10ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன.
இந்தத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்ற நிலையில் உத்திரப் பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக பதவி ஏற்றுக்கொண்டார்.

இஸ்லாமிய இளைஞர்
அவருடன் இரு துணை முதலமைச்சர்களும், அமைச்சரவையும் பதவி ஏற்ற நிலையில் இன்று அமைச்சரவை இடம் பெற்றவர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலின் போது பாஜகவுக்கு வாக்களித்ததோடு , பாஜக வெற்றியை இனிப்பு வழங்கி கொண்டாடிய இஸ்லாமிய இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் நேபாள நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள குசிநகர் மாவட்டத்தின் கிராமத்தைச் சேர்ந்த பாபர் என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்ததாக கூறப்படுகிறது.

பாஜகவுக்கு ஆதரவு
சட்டமன்றத் தேர்தலின்போது பாஜகவுக்கு அப்பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாபர் வெற்றிக்குப் பின்னர் அங்கு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றியை கொண்டாடியுள்ளார். இதனால் அப்பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் அவருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த 20ஆம் தேதி வேலை முடிந்து வீட்டுக்கு சென்ற நிலையில் அவரை வழி மறித்த மர்ம கும்பல் ஒன்று அவரை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கியது இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த பாபர் லக்னோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இறந்தார்.

அடித்துக் கொலை
இந்நிலையில் தனது கணவர் உத்திரப் பிரதேச தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாகவும் பாஜகவுக்கு தனது வாக்கையும் அளித்ததாகவும் இந்த கோபத்தில் தனது கணவரின் உறவினர்கள் 4 பேர் அவரை அடித்தே கொலை செய்து விட்டனர் என மனைவி ராம்கோலா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் தனது கணவரை அடித்துக் கொலை செய்ததாக 4 பேரின் பெயர்களையும் குறிப்பிட்டு புகார் அளித்திருந்த நிலையில், புகார் குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் விசாரணையில் மந்தமாக செயல்படுவதாக கூறப்படுகிறது.

மனைவி போராட்டம்
இந்நிலையில் பாபரின் உடலைப் பெற்றுக்கொண்டு இறுதிச் சடங்கு செய்வதற்காக நகருக்கு வந்த அவரது மனைவி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். தனது கணவரை அடித்து கொன்ற அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். இதையடுத்து அங்கு சென்ற பாஜக எம்எல்ஏவான பதர்குன் மற்றும் மாவட்ட துணை ஆட்சியர், டிஎஸ்பி ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர் . தொடர்ந்து பாபரை அடித்துக் கொலை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இது குறித்த தகவல் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு தெரிவிக்கப்பட்டது

யோகி இரங்கல்
இந்த நிலையில் பாபர் மறைவுக்கு யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது அலுவலகம் சார்பில் பதிவிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவில், "குஷிநகரின் காத்கரி கிராமத்தின் பாபர்ஜியின் மறைவுக்கு முதல்வர் யோகி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இவரை அடித்துக் கொன்றவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து தமது அலுவலகத்துக்கு அறிக்கை அளிக்கும்படியும் காவல்துறையினருக்கு முதல்வர் யோகி உத்தரவிட்டுள்ளார்" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications