டபுள் இன்ஜின் அரசு.. பிற மாநிலங்களை விட உ.பி.தான் சீக்கிரம் முன்னேறப் போகுது பாருங்க: ராஜ்நாத் சிங்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் மோடியின் தலைமையிலான இரட்டை என்ஜின் கொண்ட அரசாங்கம் சிறப்பாக நடந்து வருவதாகவும், இதனால் உத்தர பிரதேச மாநிலம் மற்ற மாநிலங்களை விட விரைவில் வளர்ச்சியடையும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் கன்வென்ஷன் மையத்தில் நிழச்சி ஒன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மற்றும் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் ஆகிய இரண்டு என்ஜின்கள் கொண்ட அரசாங்கத்தால் உத்தர பிரதேசம் எப்படி படிபப்படியாக வளர்ச்சிப்பாதையை எட்டியது என்பது குறித்து பேசினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:- உத்தர பிரதேசத்தில் இரட்டை என்ஜின் கொண்ட அரசாங்கம் என்ற அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒருபக்கம், யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு ஒருபக்கம் என இரட்டை என்ஜினுடன் உத்தர பிரதேச மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும் உத்தர பிரதேசத்தில் உள்கட்டமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படும் வழியை பார்க்கும் போது, வரும் நாட்களில் புதிய தலைமுறைக்கான உள்கட்டமைப்புகளில் அனைத்து மாநிலங்களையும் விட உத்தர பிரதேசம் தான் முன்னிலையில் இருக்கும் என்பது உறுதியாக தெரிகிறது. அதற்கான பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.
எளிய மக்களின் நலனுக்காக ஒதுக்கப்படும் நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைவது இல்லை என்றும் ஒரு ரூபாயில் வெறும் 15 பைசா மட்டுமே அவர்களை சென்றடைவதாக ராஜீவ் காந்தி கடந்த 1985-ஆம் ஆண்டு பேசியதை மேற்கோள் காட்டி பேசிய ராஜ்நாத் சிங், நிர்வாக அமைப்புகளில் அசாத்திய மாற்றங்களை பிரதமர் மோடி கொண்டு வந்து இருப்பதாகவும் மத்திய அரசால் விடுவிக்கப்படும் தொகையில் ஒவ்வொரு பைசாவும் ஏழை மக்களை முழுமையாக சென்று சேர்வதாகவும், ஏனெனில் ஊழலுக்கு இடமே இங்கு இல்லை என்றும் பேசினார்.












Click it and Unblock the Notifications