வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன்.. செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர்.. உ.பி.யில் கொடூரம்
லக்னோ: இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தில் மருத்துவமனையில் வைத்து மருத்துவர் செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மருத்துவர் உள்பட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை, உத்தரப்பிரதேசத்தில் சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த அப்பா, உத்தரகாண்ட் மாநிலத்தில் 16 வயது சிறுமியை பேருந்தில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை, உத்தரகாண்டில் வேலை முடித்து நடந்து வந்த செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை என்று சமீபகாலமாக நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

அந்த வரிசையில், உத்தரப்பிரதேசத்தில் இரவுப் பணியில் இருந்த செவிலியரை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மருத்துவர் உள்பட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 20 வயதான செவிலியர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஆகஸ்ட் 17 ஆம் தேதி இரவு 7 மணிக்கு அவர் பணிக்குச் சென்றுள்ளார். அப்போது, டாக்டர் ஷாநவாஸ் என்பவரை அவரது அறையில் சந்திக்கும்படி அந்தச் செவிலியரிடம் மருத்துவமனையின் மற்றொரு செவிலியரான மெஹ்னாஸ் என்பவர் கூறியுள்ளார். அதற்கு அந்த செவியிலியர் மறுத்துள்ளார்.
இதையடுத்து, மெஹ்னாஸ், வார்டு பாய் ஜுனைத் ஆகியோர் சேர்ந்து மருத்துவமனையின் மேல்தளத்தில் உள்ள அறைக்கு அந்த செவிலியரை கட்டாயப்படுத்தி இழுத்துச் சென்றுள்ளனர். பின்னர், ஓர் அறையில் அடைத்து வெளியில் இருந்து பூட்டிச் சென்றுள்ளனர். பின்னர், அங்கு வந்த டாக்டர் ஷாநவாஸ் அந்த அறைக்குள் நுழைந்து, உள்பக்கமாகப் பூட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, மருத்துவர் ஷானாவாஸ் அந்த செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தை வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக செவிலியரின் தந்தை மொராதாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக, மருத்துவர் உள்பட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து மொராதாபாத் காவல் கண்காணிப்பாளர் சந்தீப் குமார் மீனா கூறுகையில், செவிலியரை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக செவிலியரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். இப்பிரச்னை தொடர்பாக விசாரிக்க விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட செவிலியருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதுகுறித்து, செவிலியரின் தந்தை கூறுகையில், என் மகள் பட்டப் படிப்பு படித்து வருகிறார். கடந்த பத்து மாதங்களாக உள்ளூர் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். ஆனால், இப்போது மருத்துவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications