கோலி ரியாக்சன்.. சிவந்த கம்பீர் முகம்! போட்டி முடிந்தவுடன் “உச்சக்கட்ட சண்டை”.. ரணகளமான ஐபிஎல்
லக்னோ: ஐபிஎல் லீக் சுற்று போட்டியில் லக்னோ அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்திய நிலையில் போட்டி முடிந்தவுடன் ஆர்சிபி அணியின் மூத்த வீரர் விராட் கோலிக்கும், லக்னோ அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும் இடையே மைதானத்திலேயே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
2023 ஆம் ஆண்டுக்காக ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் இரண்டாம் பகுதி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்று உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் மற்றும் பாப் டூ பிளஸ்ஸி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் மோதின.

இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி லக்னோவை வீழ்த்தி வெற்றிபெற்றது. போட்டி முடிந்தவுடன் இரு அணி வீரர்களும் மைதானத்தில் பேசிக்கொண்டு இருந்து உள்ளனர். அப்போது லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணி பேட்ஸ்மேன் கைல் மேயர்ஸ் விராட் கோலியுடன் பேசிக்கொண்டு இருந்து உள்ளார். அப்போது அங்கு வந்த லக்னோ அணி கேப்டன் கவுதம் கம்பீர், கோலியை அவமதிக்கும் வகையில் கைல் மேயர்சை தனியாக அழைத்து இருக்கிறார்.
இதுகுறித்து கோலி, கம்பீரம் அதிருப்தி தெரிவிக்க மைதானத்திலேயே கோலிக்கும் கம்பீருக்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் வெடித்தது. பாஜக எம்பியும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான கம்பீரும், இந்திய முன்னாள் கேப்டனுமான கோலியும் அருகருகே சென்று எதிரெதிரில் நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இது கைகலப்பாக மாறும் சூழல் ஏற்பட்டது.

உடனே இரு அணி வீரர்களும் கோலியையும் கம்பீரையும் பிரித்து சென்று சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். குறிப்பாக லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல், பெங்களூரு கேப்டன் டூ பிளஸ்சி, லக்னோ சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா உள்ளிட்டோர் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு விவாதப் பொருளாகி இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற முதல் சுற்று லீக் போட்டியில் பெங்களூரு அணியை அதன் சொந்த மைதானத்தில் லக்னோ அணி வீழ்த்தியது. அப்போது பெங்களூரு அணி ரசிகர்களை நோக்கி உதட்டில் கை வைத்து கவுதம் கம்பீர் முறைத்து பார்த்தார். இந்த புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோலிக்கும் கம்பீருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு உள்ள நிலையில் ரசிகர்களிடம் அவ்வாறு நடந்துகொள்ளக்கூடாது என பலர் தெரிவித்தனர்.

இதற்கு பதிலடி தரும் வகையில் இன்று லக்னோ அணியை அதன் சொந்த மைதானத்திலேயே குறைவான இலக்கை நிர்ணயித்தும் வெற்றி பெற்றது. குறிப்பாக இப்போட்டியில் குருனல் பாண்டியா அடித்த பந்தை கேட்ச் பிடித்த கோலி, தனது உதட்டில் விரல் வைத்து கம்பீருக்கு பதிலடி கொடுத்து இருப்பார். இதனால் ஏற்பட்ட கோபம் காரணமாக கம்பீர், விராட் கோலியிடம் சண்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், டூ பிளஸ்ஸி, கோலியை தவிர்த்து மற்ற வீரர்கள் குறைவான ரன்களையே சேர்த்து ஆட்டமிழந்ததால் 126 ரன்களை மட்டுமே அந்த அணி 20 ஓவர்களில் எடுத்தது. எளிதான இலக்கை நோக்கி இறங்கிய லக்னோ அணி அதையும் சமாளிக்க முடியாமல் 108 ரன்களிலேயே ஆட்டமிழந்து தோல்வியடைந்தது.












Click it and Unblock the Notifications