முடிவுக்கு வந்த சிறை வாசம்! பத்திரிகையாளர் சித்திக் காப்பானுக்கு ஜாமீன்! விரைவில் விடுதலை வாய்ப்பு!
லக்னோ : நாட்டையே உலுக்கிய உத்திர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான நிகழ்வுகள் குறித்து செய்தி சேகரிக்க சென்றபோது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட கேரள பத்திரிகையாளர் சித்திக் காப்பான் மீது தொடரப்பட்ட பண மோசடி வழக்கில் இன்று ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச மாநிலம் அட்ராசில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு ஆளாக்கப்பட்டார.
உத்தர பிரதேசம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கொலையாளிகளுக்கு ஆதரவாக உபி மாநில அரசு செயல்பட்டதாகவும் பரபரப்பு குற்றம் சாட்டப்பட்டது.

ஹத்ராஸ் வழக்கு
உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை வாங்க முடியாது என உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களின் அனுமதி இல்லாமல் காவல் துறையினர் அப்பெண்ணின் உடலை நள்ளிரவில் இடுகாட்டுக்கு எடுத்துச் சென்று இறுதி சடங்கு செய்தனர்.

சித்திக் காப்பான்
இதுவும் பலத்த கண்டனங்களை பெற்ற நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஊடகவியாளர்கள் உபிக்கு வந்தனர். அந்த வகையில் கேரள மாநிலம் வெங்கரா பகுதியைச் சேர்ந்த சித்திக் காப்பான் என்ற பத்திரிகையாளர் இது தொடர்பாக செய்தி சேகரிக்க உத்தர பிரதேசம் சென்றார். அவருடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த அடிக்கூர் ரஹ்மான், முஹம்மத் அலாம், மசூத் அஹமத் உள்ளிட்டோரும் சென்றனர்.

ஜாமீன் கோரி மனு
இந்த நிலையில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதோடு உபா சட்டத்தின் கீழ் சித்திக் காப்பான் கைது செய்யப்பட்டு மதுரா சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என இந்தியா முழுவதும் கோரிக்கை குரல்கள் எழுந்த நிலையில் உத்தர பிரதேச மாநில அரசு அவரை விடுதலை செய்யவில்லை. தொடர்ந்து அவரது ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதை அடுத்து உச்சநீதிமன்றத்தில் சித்திக்காப்பான் தரப்பில் மேல்மறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

விரைவில் விடுதலை
இதையடுத்து அந்த வழக்கின் விசாரணையின் போது வழக்கு தொடர்பாக உபி மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் மூன்று மாதங்களுக்கு முன்பு ஜாமின் வழங்கினர். அவர் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை சித்திக் காப்பானுக்கு எதிராக பதிவு செய்தது. இதை அடுத்து அவர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உத்திர பிரதேச சிறையில் இருந்து வந்த நிலையில் சித்திக் காப்பான் மற்றும் அவரது வழக்கறிஞர்களுக்கு பயங்கரவாத செயல்களிலோ நிதி தொடர்பான நடவடிக்கைகளில் தொடர்பு இல்லை என வாதிடப்பட்டது.

வரவேற்பு
இதை அடுத்து அவருக்கு பண மோசடி வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் அவர் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் வழக்கில் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியபோது எதிர்க்கட்சிகள், பத்திரிகையாளர்கள் தீர்ப்பை வரவேற்றனர். உபி பாஜக அரசாங்கத்தால் சித்திக் ஒரு முஸ்லீம் என்பதற்காக குறிவைக்கப்பட்ட நிலையில் தற்போது அவரது விடுதலையின் மூலம் சிறைவாசம் முடிவுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications