லக்கிம்பூர் கெரி வன்முறை: மத்திய இணையமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி
லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்றதாக எழுந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
லக்னோ: லக்கிம்பூர் கெரியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொன்றதாகக் கைது செய்யப்பட்டுள்ள மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீன் மனுவை லக்கிம்பூர் நீதிமன்றம் இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்தது.
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் கடந்த அக்டோபர் மாதம் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்தபோது, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கறுப்புக்கொடி ஏந்தி வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் பாதுகாப்புக்கு வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் நுழைந்தது. இதில் கார் மோதி நான்கு விவசாயிகள் பலியாகினர் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து, நடந்த வன்முறையில் 2 பாஜக உறுப்பினர்கள் உட்பட மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர்.

கார் மோதி விவசாயிகள் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மத்திய இணையமைச்சரை பதவி விலகச் செய்ய வேண்டும் என்றும், அமைச்சரின் மகனை கைது செய்ய வேண்டும் என்றும் விவசாயிகளும் அரசியல் கட்சித்தலைவர்களும் போர்க்கொடி உயர்த்தினர். இதனையடுத்து அஜய் மிஸ்ராவின் மகன் அஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சிறையில் உள்ளார்.
இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஷ்ரா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் தமக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஆஷிஷ் மிஸ்ரா சார்பில் லக்கிம்பூர் கேரி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்க மறுத்து அவருடைய மனுவை தள்ளுபடி செய்துள்ளது
தற்போது இரண்டாவது ஜாமீன் விண்ணப்பம் வெள்ளிக்கிழமை பொறுப்பு தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் மோனா சிங் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் அவதேஷ் சிங் மூலம் அளிக்கப்பட்டது. குற்றத்தின் தீவிரத்தன்மைக் காரணமாக ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம், எஸ்.பி யாதவின் கூற்றுப்படி, மனுவை வழங்குவதற்கு போதுமான காரணங்கள் இல்லை என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தன் மகனை சிறையில் சந்தித்துவிட்டு, லக்கிம்பூர் ஆக்ஸிஜன் ஆலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது, அஜய் மிஸ்ராவிடம் செய்தியாளர் ஒருவர், ஆஷிஷ் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் கோபமடைந்த அஜய் மிஸ்ரா, அவரை தள்ளிவிட்டார். தொடர்ந்து அவரிடம் இருந்த மைக்கை பிடுங்கி வீசினார். மேலும் அவரை அவதூறான வார்த்தைகளால் கண்டபடி திட்டினார். பத்திரிகையாளரை மத்திய இணை அமைச்சர் அநாகரிகமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications