வசமாகுமா வாரணாசி? பிரதமர் மோடியை எதிர்த்து களமிறங்கும் காங்கிரஸ் வேட்பாளர்! யார் இந்த அஜய் ராய்?
லக்னோ: பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதி எம்பியாக இருக்கிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பிரதமர் மோடி அந்த தொகுதியில் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் வாரணாசி தொகுதியை ‛இந்தியா' கூட்டணியில் சமாஜ்வாதி கட்சி காங்கிரசுக்கு ஒதுக்கி உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மீண்டும் அஜய் ராய் களமிறக்கப்படலாம் என்ற தகவல் பரவும் நிலையில் அவர் யார்? பின்னணி பற்றிய முக்கிய விபரம் வருமாறு:
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் அதிக நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கும் மாநிலம் உத்தர பிரதேசமாகும். இங்கு மொத்தம் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் அதிக இடங்களை கைப்பற்றும் கட்சியால் மத்தியில் ஆட்சியை எளிதாக பிடிக்க முடியும்.

இதனால் தான் காங்கிரஸ், பாஜகவின் பிரபலமான தலைவர்கள் உத்தர பிரதேசத்தில் போட்டியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பிரதமர் மோடி குஜராத்தை சேர்ந்தவர் என்றாலும் கூட அவர் வாரணாசி தொகுதி எம்பியாக தான் இருக்கிறார். கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி மற்றும் குஜராத் வதோதரா தொகுதியில் போட்டியிட்டு 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
ஆனால் வதோதரா எம்பி பதவியை அவர் ராஜினாமா செய்து வாரணாசி எம்பியாக பிரதமரானார். மத்தியில் ஆட்சியமைக்க வேண்டும் என்றால் உத்தர பிரதேச மாநிலம் மிகவும் முக்கியம். மேலும் தான் உத்தர பிரதேச எம்பியாக இருப்பது தான் கட்சிக்கு பிளஸ் பாயிண்டாக இருக்கும் என மோடி நினைத்தது தான் காரணம். அதன்பிறகு 2019 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தான் வரும் தேர்தலிலும் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. மத்தியில் எப்படி 3வது முறையாக ஆட்சியை பிடிக்க பாஜக திட்டமிட்டுள்ளதோ அதேபோல் வாரணாசியில் பிரதமர் மோடி ஹாட்ரிக் வெற்றியை எதிர் நோக்கி உள்ளார். இத்தகைய சூழலில் தான் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் 26 கட்சிள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன.
இந்த கூட்டணியை பொறுத்தமட்டில் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ்-அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிகள் உள்ளன. இருகட்சிகள் இடையே தற்போது தொகுதி உடன்பாடு சுமுகமாக முடிவடைந்துள்ளது. மொத்தம் 80 தொகுதிகள் உள்ள நிலையில் 17 தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர்களின் பாரம்பரிய தொகுதியான அமேதி, ரேபரேலி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த 17 தொகுதியில் பிரதமர் மோடி எம்பியாக இருக்கும் வாரணாசி தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் சமாஜ்வாதி கட்சி ஏற்கனவ சுரேந்திர சிங் படேல் என்பவரை வேட்பாளராக அறிவித்தது. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு வாரணாசி வழங்கப்பட்டுள்ளதால் அந்த வேட்பாளர் திரும்ப பெறப்பட உள்ளார். இத்தகைய சூழலில் தான் காங்கிரஸ் கட்சி சார்பில் வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்ப்பது யார்? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. பிரியங்கா காந்தியை பிரதமர் மோடிக்கு எதிராக களமிறக்க வேண்டும் என ‛இந்தியா' கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் கட்சியிடம் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி அந்த முடிவை ஏற்க மறுப்பதாக கூறப்படுகிறது. மாறாக வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து மீண்டும் காங்கிரஸ் சார்பில் அஜய் ராயை களமிறக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அஜய் ராய் என்பவர் தற்பாது உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக உள்ளார். இவர் பிரதமர் மோடியை எதிர்த்து களமிறங்குவது முதல் முறையல்ல. கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக அவர் வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து களமிறங்கினார். இந்த தேர்தலில் ஆம்ஆத்மி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவாலும் பிரதமர் மோடியை எதிர்த்தார். இதில் பிரதமர் மோடி 5,81,022 ஓட்டுகள் பெற்று 3,71,784 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் 2 லட்சத்து 9 ஆயிரத்து 238 ஓட்டுகள் பெற்று 2வது இடம் பிடித்தார். இதில் 75,614 ஓட்டுகளுடன் அஜய் ராய் 3ம் இடம் பிடித்தார்.
அதன்பிறகு கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் அஜய் ராய் 2வது முறையாக பிரதமர் மோடியை வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எதிர்த்தார். இந்த தேர்தலில் பிரதமர் மோடி 6 லட்சத்து 74 ஆயிரத்து 664 ஓட்டுகள் பெற்று 4 லட்சத்த 79 ஆயிரத்து 505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தினார். இதில் சமாஜ்வாதி கட்சியின் ஷாலினி யாதவ் 1 லட்சத்த 95 ஆயிரத்து 159 வாக்குகள் பெற்று 2வது இடம் பிடித்த நிலையில் அஜய் ராய் 1 லட்சத்து 52 ஆயிரத்த 548 ஓட்டுகள் மட்டுமே பெற்று 3ம் இடம் பிடித்தார்.
இந்நிலையில் தான் மீண்டும் அஜய் ராய் வாரணாசியில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. தற்போது காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச மாநில தலைவராக அஜய் ராய் உள்ளார். இவர் பாஜகவின் மாணவர் பிரிவின் உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். உத்தர பிரதேசத்தில் 5 முறை எம்எல்ஏவாக இருந்த அனுபவம் கொண்டவர். இதில் 3 முறை பாஜகவில் இருந்தும், ஒருமுறை சுயேச்சையாகவும், ஒருமுறை காங்கிரஸ் சார்பிலும் அவர் எம்எல்ஏவாகி இருந்தார். ராய் பூமிஹார் சமூகத்தைச் சேர்ந்த இவர் பாஜகவில் இருந்து அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு சென்றார். அங்கிருந்து காங்கிரசுக்கு வந்தார்.
கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களிலும் அஜய் ராய் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்டு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதனால் இந்த முறையும் அவர் காங்கிரஸ் கட்சியால் வாரணாசியில் தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து களமிறங்கப்பட்டால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இருப்பினும் அரசியல் நோக்கர்கள் பார்வையில் வாரணாசியில் அஜய் ராய் போட்டியிட்டாலும் பிரதமர் மோடியின் வெற்றி என்பது உறுதி என்ற கருத்து நிலவுவது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications