ஷாக்! வீட்டில் பாகிஸ்தான் தேசியக்கொடி ஏற்றிய இளைஞர்.. பிடித்து ஜெயிலில் தள்ளிய உத்தரபிரதேச போலீஸ்
லக்னோ: இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி வீட்டில் 3 நாள் தேசியக்கொடி ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்த நிலையில் உத்தர பிரதேசத்தில் உள்ள வீட்டில் பாகிஸ்தான் தேசியக்கொடி ஏற்றிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75வது ஆண்டு கொண்டாட்டம் வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
'ஆஸாதி கா அம்ருத் மஹோத்ஸவ்' எனும் பெயரில் இந்த சுதந்திர தினம் கடந்த ஓராண்டாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு செய்யப்பட்டன.
சுதந்திர தினக் கொண்டாட்டம்.. கனிமொழி வீட்டில் தேசியக் கொடி

பிரதமர் மோடி வேண்டுகோள்
மேலும் ஒவ்வொருவரும் திங்களின் சமூக வலைதள பக்கங்களின் முகப்பில் தேசியக்கொடியை படமாக வைக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறி இருந்தார். அதன்படி ஏராளமானவர்கள் சமூக வலைதள பக்கங்களின் படத்தை மாற்றியள்ளனர். மேலும் 'ஹர் கர் திரங்கா'(இல்லம்தோறும் மூவர்ணக் கொடி) எனும் இயக்கத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் ஆகஸ்ட் 13ம் தேதி (நேற்று) முதல் 15 வரை 3 நாட்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஷ்மீர் முதல் குமரி வரை தேசியக்கொடி
அதன்படி இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றியுள்ளனர். மேலும் பலர் தங்களின் வாகனங்களில் தேசியக்கொடியை கட்டிவைத்து சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகின்றனர். இன்றும், நாளையும் இன்னும் ஏராளமானவர்கள் தங்களின் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் தேசியக்கொடி
இந்நிலையில் தான் உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் பகுதியில் ஒருவர் பாகிஸ்தான் தேசியக்கொடியை வீட்டில் ஏற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தாரியா சுஜான் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடுபர் முஸ்தகில் என்ற கிராமத்தில் பாகிஸ்தான் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பாகிஸ்தான் தேசியக்கொடியை அகற்றினர்.

சல்மான் கைது
இதுதொடர்பாக சல்மான் (வயது 21), உறவுக்கார பெண் ஷானாஸ் (22) உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதோடு வீட்டில் பாகிஸ்தான் தேசியக்கொடி ஏற்றியதாக சல்மானை போலீசார் கைது செய்தனர். மேலும் பாகிஸ்தான் தேசியக்கொடியை உருவாக்கிய அவரது உறவுக்கார பெண் ஷானாஸ் தயாரித்து கொடுத்த நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதுதவிர தேசியக்கொடி ஏற்ற 18 வயது நிரம்பாத ஒருவர் உதவி செய்த நிலையில் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.