இந்தியாவில் நுழைந்த மங்கி பாக்ஸ்? உபி சிறுமிக்கு உடல் முழுக்க கொப்புளங்கள்! மாதிரிகள் சேகரிப்பு
லக்னோ: மங்கி பாக்ஸ் உலகெங்கும் பரவி வரும் சூழலில், உத்தரப் பிரதேசத்தில் 5 வயது சிறுமிக்கு மங்கி பாக்ஸுக்கு ஒத்த அறிகுறிகள் தோன்றி உள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்தே உலக நாடுகள் இப்போது தான் மெல்ல மீண்டு வருகிறது. பொதுமக்களும் கொரோனா முந்தைய இயல்பு நிலைக்கு மெல்லத் திரும்பி வருகின்றனர்.
இப்போது இடையில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பே மீண்டும் மெல்ல உயரத் தொடங்கி உள்ளது. இது குறித்து மத்திய அரசும் கூட தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்குக் கடிதம் எழுதி உள்ளது.

மங்கி பாக்ஸ்
இந்தச் சூழலில் இப்போது மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை பரவ தொடங்கி உள்ளது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே இருக்கும் இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு இப்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவ தொடங்கி உள்ளது. இதுவரை 10க்கும் மேற்பட்ட நாடுகளில் 200க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மங்கி பாக்ஸ் இப்படி வேகமாகப் பரவ காரணம் என்ன என ஆய்வாளர்களுக்கும் தெரியவில்லை.

வழிகாட்டுதல்கள்
இந்தியாவில் இதுவரை யாருக்கும் இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசும் கூட வழிகாட்டுதல்களை வெளியிட்டு இருந்தது. மேலும், மங்கி பாக்ஸ் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து திரும்புவோருக்கு அறிகுறி இருந்தால் சோதனை செய்து, தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

உத்தரப் பிரதேசம்
இந்தச் சூழலில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு திடீரென மங்கி பாக்ஸுக்கு ஒத்த அறிகுறிகள் தோன்றி உள்ளன. இதையடுத்து மங்கி பாக்ஸ் பரிசோதனைக்காக அந்த 5 வயது சிறுமியின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அச்சிறுமியின் உடலில் அரிப்பு மற்றும் கொப்புளங்கள் திடீரென தோன்றியதாக காசியாபாத் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

5 வயது சிறுமி
மேலும், அச்சிறுமிக்கு வேறு எந்தவொரு உடல்நிலை பாதிப்பும் இல்லை என்றும் அச்சிறுமியோ அல்லது அவளது நெருங்கிய தொடர்புகளோ யாரும் கடந்த 1 மாதத்தில் வெளிநாடு செல்லவில்லை என்றும் காசியாபாத் தலைமை மருத்துவ அதிகாரி குறிப்பிட்டார். இன்னும் சில மணி நேரங்களில் அச்சிறுமியின் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மங்கி பாக்ஸ்
மங்கி பாக்ஸ் என்பது பெரியம்மை போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் நோயாகும். இருப்பினும், பெரியம்மை உடன் ஒப்பிடும்போது, அது சற்று குறைவான பாதிப்பையே ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள 11 நாடுகளில் எண்டமிக் நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முதலில் இந்த வைரஸ் கடந்த 1958இல் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்குகளில் கண்டுபிடிக்கப்பட்டது. 1970இல் முதன்முதலில் மனிதர்களுக்குப் பரவியது உறுதி செய்யப்பட்டது.

அறிகுறிகளும் சிகிச்சையும்
காய்ச்சல், தசைவலி, கொப்புளங்கள், சளி ஆகியவை இந்த மங்கி பாக்ஸின் பொதுவான அறிகுறிகளாகும். இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 3 முதல் 6 சதவீதம் பேர் உயிரிழக்கும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், பெரும்பாலான மக்கள் 3 முதல் 4 வாரங்களில் குணமடைந்துவிடுவார்கள். தற்போது வரை மங்கி பாக்ஸ் பாதிப்பிற்குக் குறிப்பிட்ட சிகிச்சை முறை எதுவும் இல்லை. நோயாளிகள் தனிமைப்படுத்தும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டி இருக்கும். பெரியம்மை வேக்சின் இதற்கும் பலன் அளிக்கும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications