Monkey: ரூ 80 ஆயிரம் பணப்பையை பறித்த குரங்கு! லக்னோவில் "ரூ 500 மழை"! 28000 ரூபாய் மிஸ்ஸிங்!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், அவுரியா பகுதியில் ஒரு குரங்கு ரூ. 80 ஆயிரம் மதிப்புள்ள பணப்பையைத் திருடி மரத்தில் ஏறியது. பின்னர், அங்கிருந்தபடியே ரூ. 500 நோட்டுகளை வீசி எறிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவுரியா பகுதியை அடுத்த தொன்டாபூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் ரோஹிதாஷ் சந்திரா, தனது மகன் அனுஜுடன் ஒரு நிலத்தை வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பத்திரப்பதிவு செய்வதற்காக ரூ. 80 ஆயிரம் பணத்தை மூட்டையாகக் கட்டி, இரு சக்கர வாகனத்தின் பின்புறம் வைத்திருந்தனர்.

பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்த பிறகு, இருவரும் தங்கள் வழக்கறிஞர் கோவிந்த் துபேவிடம் ஆலோசித்துக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு குரங்கு வாகனத்தில் இருந்த பணப்பையை எடுத்துச் சென்றது. குரங்கு பையை இழுத்ததால், அது திறந்து கொண்டது. இதைப் பார்த்த தந்தையும் மகனும் "பணம், பணம்" என்று அலறினர்.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் குரங்கைத் துரத்திச் சென்றனர். அப்போது அந்தக் குரங்கு அருகிலிருந்த ஒரு மரத்தில் ஏறிக்கொண்டது. அங்கு அமர்ந்தபடியே ரூ. 500 நோட்டுகளை ஒவ்வொன்றாக கீழே வீசி எறிந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் அந்த நோட்டுகளைப் பிடிக்க ஓடி வந்தனர்.
சிலர் மரத்தில் ஏறி குரங்கிடம் இருந்து பையைப் பறிக்க முயன்றனர். ஆனால், குரங்கு நோட்டுகளை வீசியதில் பல நோட்டுகள் மரத்தின் கிளைகளிலேயே சிக்கின. சில நோட்டுகள் குரங்கு சரியாகப் பிடிக்கத் தெரியாமல் கிழிந்துவிட்டன.
பின்னர், குரங்கு எறிந்த நோட்டுகளை எடுத்தவர்களிடம் சந்திரா அவற்றை திருப்பித் தருமாறு கேட்டார். அதன்மூலம் அவர் ரூ. 52 ஆயிரத்தை மீட்டார். மீதம் ரூ. 28 ஆயிரம் காணவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோவில், "இது கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், அதை உரியவர்களிடம் கொடுத்துவிடுங்கள்" என்று சிலர் சொல்வது கேட்கிறது. சிலர் பணத்தைத் திருப்பித் தந்தனர், ஆனால் சிலர் அடுத்த நோட்டு எப்போது வரும் என்ற கவனத்துடன் இருந்தனர்.

இந்தச் சம்பவம், நாம் சிறுவயதில் படித்த தொப்பி வியாபாரி கதையை நினைவுபடுத்துவதாக இருந்தது.
தொப்பி வியாபாரி தனது வியாபாரத்திற்கு மத்தியில் ஓய்வு எடுக்க மரத்தின் கீழ் அமருவார். அப்போது அங்கு வந்த குரங்கு, அவரது தொப்பிகளை எடுத்துச் சென்றுவிடும். அதை எப்படி கேட்டும் குரங்கு கொடுக்காது. அந்த தொப்பிகளை விற்றால்தானே வியாபாரிக்கு காசு! இதனால் அவர் யோசித்து, அவர் தொப்பியை தலையில் போட்டுக் கொள்வார். அப்போது குரங்கும் அது எடுத்த தொப்பியை போட்டுக் கொள்ளும். இதையடுத்து அந்த வியாபாரி, தலையில் இருந்து தொப்பியை கீழே போடுவார். அப்போது குரங்கும் போடும். இப்படியே சமயோஜிதமாக யோசித்து அந்த வியாபாரி குரங்கிடம் இருந்து தொப்பியை வாங்கிவிடுவார்.












Click it and Unblock the Notifications