மக்கள்தொகையில் 20%, இனியும் முஸ்லீம்களை மைனாரிட்டி என்றால் எப்படி? புது குண்டை போடும் பாஜக நிர்வாகி
லக்னோ: உத்தரப் பிரதேச பாஜக தலைவர் ஒருவர் இஸ்லாமியர்கள் குறித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எழுதி உள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இப்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் அங்கு நடந்த தேர்தலில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 403 இடங்கள் உள்ள நிலையில், அதில் பாஜக 255 இடங்களில் வென்று இருந்தது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியால் 111 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.

உத்தரப் பிரதேசம்
இந்தியாவில் முஸ்லீம்கள் சிறுபான்மை சமூகத்தினராகக் கருதப்படுகின்றனர். இதனால் முஸ்லீம் சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் பல்வேறு சலுகைகளை அளித்து வருகின்றன. இந்தியாவில் மிகப் பெரிய மாநிலமாக உள்ள உத்தரப் பிரதேசத்தில் தான், இஸ்லாமியர்களின் மக்கள் தொகையும் கணிசமாக உள்ளது. அங்கு சுமார் 3.5 கோடி இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

20% மக்கள் தொகை
இந்தச் சூழலில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் இல்லை என்று பாஜக நிர்வாகி ஒருவர் கடிதம் எழுதி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முஸ்லிம்கள் சிறுபான்மையினர் இல்லை என்றும் நாட்டு மக்கள்தொகையில் அவர்களின் மக்கள்தொகை 20 சதவீதமாக அதிகரித்து இரண்டாவது பெரும்பான்மை குழுவாக மாறி உள்ளனர் என்றும் உத்தரப் பிரதேச பாஜக நிர்வாகி சிம்ரஞ்சித் சிங், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இரண்டாவது பெரிய சமூகம்
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், "சிறுபான்மை என்பது பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் செல்வாக்கு இல்லாத ஒரு சமூகமாக இருக்க வேண்டும். மேலும் அதன் மக்கள் தொகையும் குறைவாகவே இருக்க வேண்டும். இருப்பினும், இப்போது நாட்டில் பல இடங்களில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 20%க்கும் அதிகமாக உள்ளனர். நாட்டின் இரண்டாவது பெரும்பான்மை சமூகத்தை எப்படி சிறுபான்மை சமூகம் என்று அழைக்கலாம்.

சிறுபான்மை
அதே நேரத்தில், உண்மையில், சிறுபான்மையினர் மக்கள் தொகையில் 0.01 முதல் 2 சதவீதமாக உள்ளனர். அவர்கள் அனைத்து அரசுத் திட்டங்களின் பலன்களையும் இழக்கின்றனர்" என்று அவர் கூறி உள்ளார். மேலும், இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் இல்லை என்பதை விளக்கும் வகையில் அவர் உபி-இல் இருக்கும் மாவட்ட வாரியான முஸ்லிம்களின் மக்கள்தொகை சதவீதத்தையும் பகிர்ந்து உள்ளார்.

கேள்வி
நாட்டில் இரண்டாம் பெரும்பான்மை சமூகமாக உள்ளவர்கள் எப்படி சிறுபான்மை சலுகைகளைப் பெறலாம் என்று கேள்வி எழுப்பி உள்ள சிம்ரன்ஜித் சிங், இதன் காரணமாக எண்ணிக்கையில் மிகவும் குறைவாக உள்ள சிறுபான்மை சமூகத்தினருக்கு அரசுத் திட்டங்களின் பலன்கள் கிடைப்பதில்லை என்றும் இதற்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications