வேகமாக உயரும் கொரோனா பாதிப்பு.. லக்னோ, கான்பூர், வாரணாசியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் லக்னோ, கான்பூர், வாரணாசியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. கொரோனா அதிகரிப்பால் அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்து வருகிறது. இதையடுத்து உத்தரபிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

லக்னோ மாவட்ட நிர்வாகம் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனறு அறிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 8ம் தேதி(இன்று) முதல் ஏப்ரல் 16 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
இதேபோல் வாரணாசியிலும் இரவு ஊரடங்கு உத்தரவு இன்று முதல் அமலுக்கு வரும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. கான்பூரில் இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 30 வரை தொடங்கும், நேரம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இருக்கும். அத்தியாவசிய சேவைகள் இந்த தடைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பழங்கள், காய்கறிகள், பால், எல்பிஜி, பெட்ரோல் டீசல் மற்றும் மருந்து கடைகளுக்கு இரவில் தடையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையம் ஆகியவற்றில் வருபவர்கள் மற்றும் செல்வோர் டிக்கெட்டைக் காட்டினால் தான் இரவில் பயணிக்க முடியும். சரக்கு ரயில்களின் இயக்கத்திற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை.
500 க்கும் மேற்பட்ட கோவிட் -19 கேஸ்களை எதிர்கொண்டால் உத்தரபிரதேச மாவட்ட ஆட்சி தலைவர்கள் அந்தந்த பகுதிகளில் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 15 ஆம் தேதி வரை மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்படும் என்று லக்னோ மாவட்ட ஆட்சி தலைவர் ஏற்கனவே ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார். மருத்துவ, நர்சிங் மற்றும் பாரா மருத்துவ நிறுவனங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது என்று அவர் கூறினார்.
லக்னோ மாவட்டத்தில் அனைத்து அரசு, அரசு சாரா அல்லது தனியார் நடத்தும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. கோவிட் -19 நெறிமுறைக்கு உட்பட்டு கல்வி நிறுவனங்களில் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.