பாலியல் குற்றவாளிகளை மாலை போட்டு வரவேற்ற உங்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்- ராகுல் அட்டாக்
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கிம்புர் கெரியில் இரண்டு சகோதரிகளின் உடல்கள் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இரண்டு சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், "பாலியல் குற்றவாளிகளை விடுதலை செய்து அவர்களுக்கு மாலையிட்டு வரவேற்பளித்தவர்களிடம் வெறென்ன எதிர்பார்க்க முடியும்?" என ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

சிறுமிகள் கொலை
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்புர் கெரியில் நேற்று இரவு இரண்டு சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் சகோதரிகள் என்பதும், பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்பதும் பின்னர்தான் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகளின் பெற்றோர், சகோதரிகள் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை செய்து கொலை
சம்பவம் குறித்து பேட்டியளித்த சிறுமியின் பெற்றோர், 17 மற்றும் 15 வயது உள்ள தனது மகள்கள் வலுக்கட்டாயமாக பைக்கில் அழைத்து செல்லப்பட்டதாகவும், அதை தடுக்க முயன்றபோது கடத்தியவர்கள் தங்களை தாக்கியதாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தூக்கிட்டவாறு தொங்கியுள்ளதை பெற்றோர் பார்த்துள்ளனர். கடத்தி சென்றவர்கள் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து, அவர்களை கொலை செய்துள்ளதாக தாய் குற்றம்சாட்டியுள்ளார். உடற்கூறாய்விலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விமர்சனம்
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து உத்தரப் பிரதேச மாநில அரசை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது டிவிட்டரில், "லக்கிம்புர் கெரியில் பட்டப்பகலில் இரண்டு சிறுமிகள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கவலையளித்துள்ளது.

ட்வீட்
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை விடுதலை செய்து அவர்களுக்கு வரவேற்பளித்தவர்களிடம் பெண்களுக்கான பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது. நமது சகோதரிகள் மற்றும் சிறுமிகளுக்கு நாட்டில் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்." என்று பதிவிட்டுள்ளார். காவல்துறை தரப்பில் சிறுமிகள் கடத்தப்பட்டது மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறுமிகள் பிணமாக மீட்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் தாய் காவல் நிலையத்தில் சிறுமிகள் கடத்தப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் 3 நாட்கள் மட்டும்
காங்கிரஸ் ஏற்கெனவே வலுவாக உள்ள கேரளாவில் 18 நாள் நடைப்பயணம் என்றும், காங்கிரசுக்கு ஒரேயொரு எம்எல்ஏ கூட இல்லாத மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் வெறும் 3 நாட்கள் நடைப்பயணம் என்றும் 'தேச ஒற்றுமை நடைப்பயணத்தில்' ராகுல் அறிவித்திருந்தது ஏற்கெனவே விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உத்தரப் பிரதேசத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.












Click it and Unblock the Notifications