அமேதி அப்படியேதான் உள்ளது.. ஆனால்.., நேரு குடும்ப கோட்டையில் கொந்தளித்த ராகுல்காந்தி..!
லக்னோ : அமேதியின் ஒவ்வொரு பாதையும் இன்னும் அப்படியே உள்ளது ஆனால் மக்கள் பார்வையில் அரசாங்கத்தின் மீது கோபம் இருக்கிறது என அமேதியில் நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்பட்டு வந்த உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி நாடாளுமன்றத் தொகுதியில் தொடர்ந்து காங்கிரஸ் தான் வெற்றி வாகை சூடி வந்தது. குறிப்பாக நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இந்தச் சூழலில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதிராணி, ராகுல் காந்தியை தோற்கடித்து வெற்றி பெற்றார் . இந்த நிலையில் விலைவாசி உயர்வை கண்டித்து அமேதியில் இன்று காங்கிரஸ் சார்பில் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு பேரணி நடைபெற்றது.

அமேதியில் பேரணி
மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற இந்த பேரணியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் உத்தரபிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி அமேதி மக்கள் எனக்கு அரசியலைப் பற்றி நிறையக் கற்றுக் கொடுத்தனர் என்று கூறினார்.

அரசாங்கத்தின் மீதான கோபம்
நீங்கள் எனக்கு அரசியலுக்கு வழியை காட்டி உள்ளீர்கள், உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றும், நான் 2004இல் அரசியலுக்கு வந்தேன் நான் எனது முதல் தேர்தலில் போட்டியிட்ட நகரம் அமேதி எனக் கூறிய ராகுல் காந்தி, அமேதியில் உள்ள ஒவ்வொரு பாதையும் இன்னும் அப்படியே உள்ளது என்று, மக்கள் பார்வையில் அரசாங்கத்தின் மீதான கோபம் மட்டுமே உள்ளது என கூறினார்.

அமேதி மக்களுக்கு இதயத்தில் இடம்
இதயங்களில் அமேதிக்கு மக்களுக்கு முன்பு போலவே இடமுண்டு என்ரும், நாங்கள் இன்னும் அநீதிக்கு எதிராக ஒன்றுபட்டு உள்ளோம் என்று கூறிய ராகுல்காந்தி, தொடர்ந்து சீனாவுடனான இந்தியாவின் எல்லை தகராறு, மத்திய அரசிக்கு எதிரான போராட்டங்களில் விவசாயிகள் மரணம் மற்றும் பாஜக மீதான இந்து வெர்சஸ் இந்துத்துவவாதி போன்ற குற்றச்சாட்டுகளையும் முன்வைத்த பேசினார்.

உத்திரபிரதேசத்தில் தேர்தல்
உத்திரபிரதேசத்தில் அடுத்த ஆண்டும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திரமோடி அந்த மாநிலத்தை குறிவைத்து தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் வரணாசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், குறுகலான தெருக்களில் நடந்து சென்று மக்களைச் சந்தித்தார். இந்நிலையில் பாஜகவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அம்மாநில தேர்தல் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி பொறுப்பேற்றுள்ள நிலையில், ராகுல்காந்தியின் இந்த பேரணி அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications