பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை விதித்த மத்திய அரசு.. "இதுதான் புதிய இந்தியா" யோகி ஆதித்யநாத் வரவேற்பு!
லக்னோ: பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்ததற்கு உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. பிஎஃப் அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
சில மாதங்களுக்கு முன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம். மனித உரிமை அமைப்பு போல இந்த இயக்கம் செயல்படுகிறது. ஆனால் ஆப்கானிஸ்தான், சிரியா என யுத்தம் நடைபெறும் நாடுகளுக்கு தீவிரவாத இயக்கங்களுக்கு ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுள்ளது என்று பேசி இருந்தார்.

அமலாக்கத்துறை சோதனை
இந்த நிலையில், கடந்த செப். 22-ம் தேதி, பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை சோதனை செய்தது. கேரளா, உத்தரப் பிரதேசம் என்று 10 மாநிலங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் தமிழகத்தில் கோவை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

பிஎஃப்ஐ நிர்வாகிகள் கைது
இதனைத்தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்தல், பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளில் சேர மக்களை ஊக்குவித்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாக கூறி ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனை மற்றும் கைது நடவடிக்கையைக் கண்டித்து பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீண்டும் சோதனை
தொடர்ந்து உத்தரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பிஎஃப்ஐ நிர்வாகிகளின் வீடுகளில் காவல் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனைகளின் அடிப்படையில் பிஎஃப்ஐ மற்றும் எஸ்டிபிஐ அமைப்புகளைச் சேர்ந்த 247 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்டவிரோதமானது என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் பிஎஃப்ஐ மற்றும் அதன் துனை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

யோகி ஆதித்ய்நாத் வரவேற்பு
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்ததற்கு உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து யோகி ஆதித்யநாத் தனது ட்விட்டர் பக்கத்தில், தேசவிரோத செயல்களில் ஈடுபடும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகள் மீது விதிக்கப்பட்ட தடை பாராட்டுக்குரியது மற்றும் வரவேற்கத்தக்கது.

இதுதான் புதிய இந்தியா
தேசத்தின் ஒற்றுமைக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதிகள், குற்றவாளிகள், அமைப்புகள் மற்றும் தனிநபர்களை ஏற்றுக் கொள்ள முடியாது. இது தான் புதிய இந்தியா என்று குறிப்பிட்டுள்ளார். பிஎஃப்ஐ அமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு பாஜகவைச் சேர்ந்த பல்வேறு மாநில முதலமைச்சர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications