எம்பிபிஎஸ் படிக்க உயரம் ஒரு குறையல்ல.. சாதித்த நவதாரணி..மருத்துவ மாணவியாக பயணம் ஆரம்பம்
மதுரை: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 4 அடிஉயரமுள்ள வளர்ச்சிக்குறைபாடுள்ள மாணவி ஒருவர், நேற்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க சேர்ந்து உள்ளார். சாதித்த அந்த மாணவியின் பெயர் நவதாரணி. சாதாரண எளிய குடும்பத்தைச் சேர்ந்த நவதாரணி, தனது மருத்துவர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை இலக்காக வைத்து தற்போது சாதித்தும் காட்டியுள்ளார்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின. சீனியர் மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை மலர்களை கொடுத்து வரவேற்றனர். அப்போது 4 அடிக்கும் குறைவான உயரமுள்ள மாணவி நவதாரணி, தனது பெற்றோருடன் மருத்துவக்கல்லூரிக்கு வந்தார்.
மாணவி நவதாரணிக்கு மருத்துவக்கல்லூரியின் சீனியர் மாணவர்கள், பேராசிரியர்கள் பூக்களை கொடுத்து வரவேற்றதுடன் வாழ்த்து தெரிவித்தனர்.

மாணவி நவதாரணி
மாணவி நவதாரணி புதுக்கோட்டை மாவட்டம் கீழா நிலக்கோட்டையைச் சேர்ந்தவர். சாதிப்பதற்கு எதுவும் தடையில்லை எனவும், மருத்துவப் படிப்பும், சிறப்பு மருத்துவப்படிப்பும் படித்து வளர்ச்சி குறைவானவர்களுக்கு சேவை செய்ய உள்ளதாகவும் மருத்துவ மாணவி நவதாரணி தெரிவித்துள்ளார்.

வளர்ச்சி குறைபாடு
தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து 491 மதிப்பெண்கள் பெற்று ஒரே ஆண்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவம் படிக்க தேர்வாகி உள்ளார். நவதாரணியின் சகோதரர் தற்போது பிளஸ் 2 படிக்கிறார் அவரும் வளர்ச்சி குறைபாடுள்ளவர்.

உயரக்குறைபாடு
நவதாரணி 3 வயதாக இருக்கும்போது வளர்ச்சி குறைபாடு இருந்தது. சில ஆண்டுகளில் சரியாகிவிடும் என நினைத்தோம். பின்னர் புதுச்சேரி ஜிப்மர், சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தோம். ஆனால் சரியாகவில்லை என்று நவதாரணியின் தாயார் அமுதா தெரிவித்தார். அவருக்கு விவரம் தெரிந்த நாள் வரை அவரையும், தம்பியையும் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று வந்தோம்.

நம்பிக்கை நவதாரணி
பண வசதியில்லாததால் ஒரு கட்டத்தில் சிகிச்சையை நிறுத்தி விட்டு நன்றாக படிக்க வைப்போம் என்ற முடிவுக்கு வந்தோம். நவதாரணி மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று நாங்கள் பட்ட வேதனையை நேரடியாக உணர்ந்ததால் தானும் மருத்துவராக முடிவெடுத்தார். நீட் கோச்சிங் சென்றார். ஆனால், சரியாக சொல்லி கொடுக்காததால் அவரே படித்து நீட் தேர்வில் வென்று மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளார்.

சாதித்தது எப்படி
என் உடல் வளர்ச்சி குறித்து கேலி செய்வார்கள். அப்போது வருந்தினாலும் நாளடைவில் அதை மறந்து சாதிக்க நினைத்தேன் என தெரிவித்தார். சாதிக்க உயரம் தடை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். என் உயரத்தைப் பார்த்து எல்லோரும் கிண்டல் செய்வார்கள். அதை எல்லாம் நான் பொருட்படுத்தியது இல்லை.

விளையாட்டு வீராங்கனை
கவுன்சிலிங் வந்த போதே செய்தியாளர்களிடம் பேசிய நான் தேசிய அளவிலான விளையாட்டு வீராங்கனை. இறகுப் பந்து, தடகளம், நீளம் தாண்டுதல் போன்ற விளையாட்டுகளை விளையாடுவேன். இறகுப் பந்தில் தேசிய அளவிற்கு போயுள்ளேன். இனி முழுக்க முழுக்க படிப்பில் தான் கவனம் செலுத்த உள்ளேன். எம்.பி.பி.எஸ் படித்து முடித்ததும் நரம்பியல் நிபுணர் படிப்பு படிக்க ஆசை என்றும் நவதாரணி நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

உதவி செய்ய ஆசை
சிறுவயதில் இருந்து எனது லட்சியம் மருத்துவம் படிக்கவேண்டும் என்பது. என் அப்பா, அம்மா என்னை சிறுவயதில் இருந்தே மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர். அப்போ நிறைய பார்த்திருக்கிறேன். அதனால் என்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்ய நினைக்கிறேன். என்னைப் போல் நிறைய பேர் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் படிக்காமல் இருப்பார்கள். பெற்றோர் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். யாரை பார்த்தும் பயப்படாதீர்கள் என்றும் நவதாரணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications