"எல்லாம் அண்ணன்-தம்பி சண்டைதான்! ஓபிஎஸ் மனம் திருந்தி வந்தால் நிச்சயம் ஏற்போம்!" செல்லூர் ராஜு பளீச்
மதுரை: மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
மதுரை சிக்கந்தர் சாவடி, கோவில்பாப்பாகுடி பகுதிகளில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பள்ளி கட்டிட பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து முக்கிய கருதத்துகளைத் தெரிவித்தார்.

செல்லூர் ராஜு
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, "தேர்தல் நேரத்தில் இந்து மதத்தை நேசிப்பது போல திமுகவினர் செயல்படுவார்கள். தர்மபுரி எம்.பி. பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளரை பொது இடத்தில் இங்கிதம் இல்லாமல் திட்டி உள்ளார். ஒன்றரை ஆண்டுகளில் சிறுபான்மை மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஒட்டு வாங்க மட்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
Recommended Video

பிரதமர் மோடி
தற்போது, ஆன்மீக சுற்றுலா என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் வேலையைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அரசியலைப் பொறுத்தவரைக் கூட்டணி நிரந்தரமானது அல்ல. தேர்தல் நேரத்தில் பாஜக உடன் கூட்டணி தொடர்வது குறித்து கட்சி முடிவெடுக்கும். பிரதமரின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இந்தியா ஒரு வல்லரசு நாடாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அப்துல் கலாமின் கனவை நோக்கி பாஜக அரசு முன்னேறிச் செல்கிறது. எனவே மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக வர வேண்டும்.

அண்ணன் தம்பி போராட்டம் தான்
இரட்டை குதிரையில் சவாரி செய்வது முடியாது ஒன்று. இதன் காரணமாக ஒற்றை மனிதரின் அதிகாரத்தில் கட்சியைக் கொண்டு வந்துள்ளோம். ஒரு தொண்டன் கூட கட்சியில் இருந்து செல்லக் கூடாது என்பதே எங்கள் விருப்பம். காளிமுத்து, ஆர் எம் வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன் எல்லோரும் தவறு செய்து விட்டு மன்னிப்பு கேட்டுத் திரும்பியவர்கள் தான். எனவே, எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் பிரிவும் அண்ணன் தம்பி போராட்டம் தான்.

நிச்சயம் ஏற்போம்
ஓ.பன்னீர்செல்வம் மனம் திருந்தி வந்தால் நிச்சயம் ஏற்போம். ஜி.எஸ்.டி வேண்டாம் எனச் சொல்லிவிட்டு பால், தயிர், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கு வரி கேட்டு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்து உள்ளார். வரும் 25ம் தேதி மின் கட்டண உயர்வைக் கண்டித்து மதுரையில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications