அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு சார்பில் வழங்கப்பட்ட நிலம், பல ஆண்டுகளுக்கு பின்னர் ரத்து செய்யப்பட்டது, அந்த நிலம் அரசு புறம்போக்கு நிலம் என பின்னாளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து நில நிர்வாக ஆணையர் ஆஜராகி விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை பெருமாள் புரத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.. அந்த மனுவில், "தூத்துக்குடி மாவட்டம், குமாரகிரி கிராமத்தில் காசினி அம்மாள் என்பவருக்கு, அரசு சார்பில் கடந்த 1969ஆம் ஆண்டு நிலம் ஒதுக்கப்பட்டு, உரிய ஆவணங்களும் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நிலத்திற்குகாசினியம்மாளும், அவர் கணவரும் விவசாயம் செய்தும், தொடர்ந்து வரி செலுத்தியும் வந்துள்ளனர். இந்தச் சூழலில், அவர்கள் இருவரும் உயிரிழந்ததை தொடர்ந்தும் வரி செலுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே சொத்தை பாகப்பிரிவினை செய்வதற்கு காசினியம்மாளின் வாரிசுகள் பட்டா கோரி விண்ணப்பித்துள்ளார்கள். அப்போது காசினி அம்மாளின் நிலம் அரசு புறம்போக்கு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு தரப்பட்ட நிலம் ஒப்படைப்பு 1981ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு, அரசு புறம்போக்கு என வகைபடுத்தப்பட்டுள்ளது என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் பாதிக்கப்பட்ட மனுதாரர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த ஆண்டு மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி, "மனுதாரர்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது, முறையாக வரி செலுத்தி வருகிறார், உரிய ஆவணங்களை வைத்துள்ளார், நிலம் ஒப்படைப்பு ரத்து செய்யபடுவதற்கு முன் உரிய நோட்டீஸ் வழங்கவில்லை. எனவே, பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கடந்த 2023ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் இது நாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நில நிர்வாக ஆணையர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரி பாஸ்கர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுவாமிநாதன் முன் நேற்று (ஏப்ரல் 24) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 2023ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. இது நாள் வரை எந்த வித நடவடிக்கையும் அரசு தரப்பில் எடுக்கவில்லை.
வழக்கு விசாரணைக்கு வரும்போது கடந்த சில மாதங்களாக நிறைவேற்றுகிறோம் என்று வாய்மொழியாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், இது நாள் வரை நிறைவேற்றவில்லை. எனவே இதுகுறித்து நில நிர்வாக ஆணையர் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications