என்னது பச்சோந்தியா.. நீங்க தான் எடுபுடி.. கமலை சாடிய எடப்பாடிக்கு எதிராக மதுரையில் பரபர போஸ்டர்
மதுரை: சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் மழை பாதிப்பு குறித்து அரசை குறை கூறுவதற்கு இது நேரமல்ல என தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை எடப்பாடி பழனிச்சாமி பச்சோந்தி என விமர்சனம் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக மதுரையில் கடும் வார்த்தைகளால் மக்கள் நீதி மய்யம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் தமிழகம் மற்றும் ஆந்திரா பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக கடந்த 3ம் தேதி நள்ளிரவு முதல் 4ம் தேதி நள்ளிரவு வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இதனால் 4 மாவட்டங்களும் மழைநீரில் மூழ்கின. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் பாதிப்பை சந்தித்த நிலையில் சென்னை முழுவதுமாக பாதிக்கப்பட்டது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.
வீடுகளை மழைநீர் மூழ்கடித்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வீடுகளை விட்டு வெளிய இதையடுத்து புயல் ஆந்திராவில் 5ம் தேதி கரையை கடந்த நிலையில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழை நின்றது. இதையடுத்து மீட்பு பணி என்பது வேகமெடுத்தது. தற்போது சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இருப்பினும் சில இடங்களில் இன்னும் தண்ணீர் தேங்கி உள்ளது. அதனை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தான் சென்னை வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது தான் காரணம் என அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். மாறாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் தான் 2 நாட்களில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி உள்ளது என தெரிவித்து வருகின்றனர்.
இந்த விஷயத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், ‛‛மழை பாதிப்பு குறித்து அரசை குறை சொல்லும் நேரம் இதுவல்ல. அரசு எவ்வளவு தான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கை சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும். இந்த தருணத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம்'' என தெரிவித்து இருந்தார்.
2015 வெள்ளப்பெருக்கின்போது அதிமுவை கடுமையாக விமர்சனம் செய்த கமல்ஹாசன் தற்போது திமுகவுடன் நெருக்கம் காட்டி வரும் நிலையில் இப்படி தெரிவித்து இருந்தார். இதுபற்றி முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‛‛கமல்ஹாசன் ஒரு பச்சோந்தி போன்றவர், அவரை அரசியல்வாதியாக நான் மதிக்கவில்லை, அவர் கட்சியில் அவரை தவிர வேறு யாரும் இல்லை" எனக் காட்டமாகக் கூறினார்.
இந்நிலையில் தான் கமல்ஹாசனை விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‛‛வன்மையாக கண்டிக்கிறோம். மழை வெள்ளத்தால் பாதித்த மக்களுக்காக களத்தில் நின்று கொண்டிருக்கும் நம்மவரை விமர்சிக்கும் களத்திற்கே செல்லாத எடுபுடியே! நாவை அடக்கு... தலை குனிந்து பதவி வாங்கிய எடப்பாடியே! நம்மவரை விமர்சனம் செய்ய உமக்கு தகுதி இல்லை'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இப்போது டிரெண்ட்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications